லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான எவர்டன், டேவிட் மோயசை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது.
இரண்டாவது முறையாக மோயஸ் எவர்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வரை மொய்ஸ் 12 ஆண்டு காலத்துக்கு எவர்டன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார். தத்தளித்துக்கொண்டிருந்த அக்குழுவை அவர் நன்கு மீளச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சி சுமுகமாக இயங்கும் குழுவாக உருவெடுக்கச் செய்தார்.
இப்போது மறுபடியும் பல சவால்களை எதிர்நோக்கும் எவர்டன், உதவிக்கரம் நீட்ட மொய்சையே நாடுகிறது.
2013ல் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் மோயஸ். அந்தக் குழுவில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததைத் தொடர்ந்து அவதூறுக்கு ஆளானர்.
பின்னர் சண்டர்லேண்ட், வெஸ்ட் ஹேம் யுனைடெட், ஸ்பெயினின் ரியால் சோசியடாட் ஆகிய குழுக்களின் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார். இருமுறை வெஸ்ட் ஹேம் நிர்வாகியாக இருந்தார்; இரண்டாவது முறை அக்குழுவுக்கு ஐரோப்பிய கான்ஃபிரன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுதந்தார். அதுவே சுமார் 40 ஆண்டுகளில் வெஸ்ட் ஹேம் வென்ற முதல் கிண்ணமாகும்.
இப்போது முதலில் முத்திரை பதித்த குழுவிலேயே சேர்ந்துள்ளார் மோயஸ்.
இதற்கு முன்பு எவர்டன் நிர்வாகியாக இருந்த ஷோன் டைக், கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) பதவி நீக்கம் சேய்யப்பட்டார்.