தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தயாராய் இரு’: ருதுராஜிடம் அறிவுறுத்திய டோனி

1 mins read
0d6274e2-52b4-4a0d-945f-567c7f923fc5
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் டோனியுடன் (இடது) இந்நாள் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல் ) டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதற்கு, ஐபிஎல் தொடர் 2008இல் தொடங்கப்பட்டதிலிருந்து அவ்வணியின் தலைவராகச் செயல்பட்டு வந்த மகேந்திர சிங் டோனி முக்கியமானதொரு காரணம்.

அவருக்கு 42 வயதாகிவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்கும் 17வது ஐபிஎல் பருவத்தில் சென்னை அணியை ருதுராஜ் கெய்க்வாட், 27, வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் தமக்கு வியப்பில்லை என ருதுராஜ் குறிப்பிட்டார்.

“நான் எதையும் மாற்ற வேண்டிய தேவையிராது என நினைக்கிறேன். தலைமைப் பதவி குறித்து கடந்த ஆண்டே அவர் கோடிகாட்டியதால் எனக்கு வியப்பில்லை. ‘தயாராக இரு’ என்று மட்டும் அவர் சொல்லி இருந்தார்.

“சென்னை அணியில் இருப்பது அற்புதமான உணர்வு. இங்கிருந்துதான் எனது ஐபிஎல் பயணம் தொடங்கியது. டோனியின் நம்பிக்கையைப் பெற்று, தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருப்பதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்,” என்று ருதுராஜ் கூறினார்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான சென்னை அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்தாட உள்ளது.

பெங்களூரு அணியின் தலைவர் டு பிளஸ்ஸி, சென்னை அணிக்காக விளையாடியபோது அவரும் ருதுராஜும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கியது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்