தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டோனி, கோஹ்லியிடமிருந்து கே.எல்.ராகுலுக்கு ரூ.3.5 கோடி திருமணப் பரிசு: தகவல்

1 mins read
3ef6cb6c-2804-4583-83bc-885da8482890
நீண்டநாள் காதலியான நடிகை அதியா ஷெட்டியை ஜனவரி 23ஆம் தேதி கரம்பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல். படங்கள்: கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி/இன்ஸ்டகிராம் -

நீண்டநாள் காதலியான நடிகை அதியா ஷெட்டியை ஜனவரி 23ஆம் தேதி கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு அணியின் முன்னாள் தலைவர்களான எம்.எஸ்.டோனி மற்றும் விராத் கோஹ்லியிடமிருந்து மாபெரும் பரிசுகள் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கேளிக்கை தளமான 'பிங்க்வில்லா' வெளியிட்ட தகவலின்படி, ராகுலின் திருமணத்துக்காக டோனியும் கோஹ்லியும் ரூ3.5 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளனர்.

மோட்டார்சைக்கிள் பிரியரான டோனி, ரூ.80 லட்சம் மதிப்புடைய 'காவாசாக்கி நிஞ்சா' மோட்டார்சைக்கிளைப் பரிசளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுலின் நெருங்கிய நண்பருமான கோஹ்லி, ரூ.2.7 கோடி மதிப்புடைய 'பிஎம்டபிள்யூ' காரைப் பரிசளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், ராகுல்-அதியா தம்பதியர் தரப்பில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

ராகுலின் திருமணத்திற்கு டோனியும் கோஹ்லியும் வர முடியாவிட்டாலும் அவர்கள் அளித்த பரிசுகள் வந்துசேர்ந்ததாக நம்பப்படுகிறது.

ஐபிஎல் 2023 போட்டிக்கு டோனி தயாராகி வருகிறார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடி வந்தார்.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கும் ராகுலின் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கோஹ்லியைப்போலவே அவர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டியிருந்தது.