கிரிக்கெட்: 42ஆவது முறையாக ரஞ்சி கிண்ணம் வென்றது மும்பை

2 mins read
3c3884b5-7ef6-4a9b-ba10-0281fffca835
கிண்ணத்தைப் பெற்றுக்கொண்ட மும்பை அணித்தலைவர் அஜிங்கிய ரகானே. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

மும்பை: இந்தியாவின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் 42வது முறையாக வாகை சூடியது மும்பை அணி.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வணி மீண்டும் ரஞ்சி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இம்முறை இறுதிப் போட்டியில் மும்பை அணி, விதர்பா அணியை 169 ஓட்டங்களில் தோற்கடித்தது.

முதல் இன்னிங்சில் மும்பை அணி 224 ஓட்டங்களையும் விதர்பா அணி 105 ஓட்டங்களையும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்சில் முஷீர் கான் (136), அணித்தலைவர் அஜிங்கிய ரகானே (73), ஷ்ரேயாஸ் ஐயர் (95) ஆகியோர் சிறப்பாக ஆட, மும்பை அணி 418 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து, விதர்பா அணிக்கு 518 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் இன்னிங்சைப் போன்றே இரண்டாவது இன்னிங்சிலும் விதர்பா அணி எளிதில் சாய்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அதன் பந்தடிப்பாளர்கள் மும்பை அணியின் பொறுமையைச் சோதித்தனர்.

ஒருவழியாக, 134.3 ஓவர்களில் விதர்பாவின் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அவ்வணி 368 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, கிண்ணம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

கிண்ணம் வென்ற மும்பை அணிக்கு ரூ.5 கோடியும் இரண்டாமிடம் பிடித்த விதர்பா அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன.

முஷீர் கான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அணி வீரர் சர்ஃபராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கிண்ணத் தொடரில் 502 ஓட்டங்களைக் குவித்ததோடு, 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மும்பை அணியின் 25 வயது தனுஷ் கோட்டியன் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்