டப்லின்: யூயேஃபா நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் அண்டை நாடான அயர்லாந்துக் குடியரசை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து.
இங்கிலாந்தின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் லீ கார்ஸ்லியின் முதல் ஆட்டமே அபாரமாக முடிந்தது. கார்ஸ்லி, விளையாட்டாளராக இருந்தபோது அயர்லாந்தைப் பிரதிநிதித்தார்.
டெக்லன் ரைஸ், ஜேக் கிரீலிஷ் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர். அவ்விருவருக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இருநாட்டுப் பின்னணியும் இருப்பதுடன் அவர்கள் வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் அயர்லாந்துக்கு விளையாடியும் இருக்கின்றனர்.
ரைஸ், இங்கிலாந்தைப் பிரதிநிதிப்பதற்கு முன்பு அயர்லாந்துக்கு மூன்று முறை விளையாடினார். கிரீலிஷ், இளம் வீரர்களுக்கான அயர்லாந்து அணியில் விளையாடியிருக்கிறார்.
நேஷன்ஸ் லீக் மூன்றாம் பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரியை 5-0 எனும் கோல் கணக்கில் துவைத்தெடுத்தது ஜெர்மனி.
2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ஜெர்மனி வென்றது. அதற்குப் பிறகு அந்த அணி எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை.
எனினும், 2014ஆம் ஆண்டு நட்சத்திரங்களாக விளங்கிய டோனி குரூஸ், மேனுவெல் நோயர், தாமஸ் முல்லர் உள்ளிட்டோர் தேசிய அணியிலிருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தற்போதைய ஜெர்மனி அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அத்தகைய இருவரான ஃபுளோரியான் வெர்ட்ஸ், ஜமால் முசியாலா இருவரும் ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் ஆளுக்கு ஒரு கோலைப் போட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நிக்லாஸ் ஃபுல்குருக், அலெக்சாண்டர் பாவ்லோவிச், கய் ஹாவர்ட்ஸ் ஆகியோர் மற்ற மூன்று கோல்களைப் போட்டனர்.
மற்றொரு மூன்றாம் பிரிவு ஆட்டத்தில் போஸ்னியா ஹர்ட்சோகொவினாவை 5-2 எனும் கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து.