தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிஷப் பன்டைக் கட்டுப்படுத்துவது அவசியம்: ஆஸ்திரேலிய அணித்தலைவர்

2 mins read
32d261d2-5a3d-4b50-b7a4-e14636f9ac57
சென்னையில் நடந்த பங்ளாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‘ரிவர்ஸ் ஸ்லாப்’ முறையில் பந்தடிக்கும் இந்திய வீரர் ரிஷப் பன்ட். - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான கடைசி இரு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வெல்ல ரிஷப் பன்ட் முக்கியப் பங்காற்றியதை ஒப்புக்கொண்டார் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ்.

அதனால், இவ்வாண்டு இறுதியில் அவ்விரு அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விக்கெட் காப்பாளரும் பந்தடிப்பாளருமான பன்டைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறார் அவர்.

கடந்த 2018-19, 2020-21 நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பன்ட் சிறப்பாகச் செயல்பட்டார். அதன்பின் 2022 டிசம்பரில் கார் விபத்தில் கடுமையாகக் காயமுற்ற அவர், அண்மையில் பங்ளாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன்மூலம் அனைத்துலக அரங்கில் தமது மறுவரவை அவர் உரக்க அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 12 இன்னிங்ஸ்களில் பன்ட் 62.40 என்ற சராசரியுடன் 624 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அதிலும், 2021ஆம் ஆண்டு பிரிஸ்பனின் காபா அரங்கில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் பன்ட் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைக் குவித்து, தமது அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

“பன்டின் ‘ரிவர்ஸ் ஸ்லாப்’ நம்ப முடியாத வகையிலான ‘ஷாட்’. அதுவே, அவர் எவ்வளவு திறமையான ஆட்டக்காரர் என்பதைக் காட்டுகிறது,” என்றார் கம்மின்ஸ்.

அதிரடியாக விளையாடக்கூடிய பன்ட் போன்றவர்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஆட்டத்தை அவர்கள் தங்கள் வசமாக்கிவிடுவர் என்றும் கம்மின்ஸ் சொன்னார்.

2014-15ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது ஆஸ்திரேலியா. அவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்