புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராகச் செயல்பட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை இந்தியா அணுகியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இப்போதைய தலைமைப் பயிற்றுநரான ராகுல் டிராவிட், அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் விடைபெறவுள்ளார்.
இதனையடுத்து, புதிய தலைமைப் பயிற்றுநருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்கிறது. விண்ணப்பம் செய்ய மே 27ஆம் தேதியே கடைசி நாள்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பான்டிங், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராகச் செயல்பட தம்மை அணுகியதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்றுநர் நியமனம் தொடர்பில் நானோ பிசிசிஐயோ முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எவரையும் அணுகவில்லை. அதன் தொடர்பில் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. தேசிய அணிக்குச் சரியான பயிற்றுநரைத் தேர்வுசெய்வது என்பது கவனமான, முழுமையான செயல்முறை,” என்று ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் டி20 போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக இருந்து வருகிறார் பான்டிங். அவருடன், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் பயிற்றுநரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கரையும் பிசிசிஐ அணுகியதாகத் தகவல் வெளியானது.