தங்க ‘கோல்’ போட விழையும் வலைப்பந்து அணி

3 mins read
3d2e4b0e-d492-436d-8367-a283fc98470b
தற்காப்பு ஆட்டக்காரர் ரீனா திவ்யா (பந்துடன்). - படம்: நெட்பால் சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வலைப்பந்தில் சிங்கப்பூர் தங்கம் வென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக 2015ல், போட்டிகள் சிங்கப்பூர் மண்ணில் நடைபெற்றபோதுதான் சிங்கப்பூர் தங்கம் வென்றது. அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று முறையும் மலேசியாவே வாகைசூடியுள்ளது.

பகலில் மென்பொருள் பொறியாளர்; மாலையிலும் வாரயிறுதியிலும் வலைப்பந்து விளையாட்டாளர். அவர்தான் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்கும் ரீனா திவ்யா, 27. அவர் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடுகிறார்.

தன் பலதுறைத் தொழிற்கல்லூரி அணியில் வலைப்பந்து விளையாடியபின், தேசிய U-21 அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீனா, வலைப்பந்து ‘சூப்பர் லீக்’கிலும் விளையாடுகிறார்.

“அண்மையில் என் தாயார் என் விளையாட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளார். என் அத்தை, உறவினர் இணையத்தில் என் விளையாட்டுகளைக் காண்கின்றனர். அண்மைய சிங்லைஃப் நே‌‌ஷன்ஸ் கிண்ணத்துக்கு ஒவ்வொரு போட்டிக்கும் வந்தார்கள்,” என்ற ரீனா, தன் குடும்ப ஆதரவு தன்னை ஊக்கப்படுத்துவதாகக் கூறினார்.

கோல் போடும் முன்னணி ஆட்டக்காரராக (Goal shooter, attack) விளையாடுகிறார் அமந்தீப் கோர் ‌சாஹல், 25. அவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியலில் முனைவர் கல்வியும் பயின்றுவருகிறார்.

தொடக்கப்பள்ளியிலிருந்து வலைப்பந்து விளையாடிவருகிறார் அமந்தீப். 2017ல் தேசிய U-19 அணியிலும் பின்பு தேசிய U-21 அணியிலும் தேசிய வளர்ச்சி அணியிலும் (development squad) நுழைந்த அவர், வலைப்பந்து ‘சூப்பர் லீக்’கில் சிறப்பாகச் செய்து தேசிய அணிக்குத் தகுதிபெற்றார்.

கோல் போடும் முன்னணி ஆட்டக்காரரான (Goal shooter, attack) அமந்தீப் கோர் ‌சாஹல், 25.
கோல் போடும் முன்னணி ஆட்டக்காரரான (Goal shooter, attack) அமந்தீப் கோர் ‌சாஹல், 25. - படம்: ரோன் லோ

அமந்தீப், ரீனா - இருவரும் ஒரே போட்டியில் (‘பசிபிக்ஆஸ்’ போட்டி) 2022ல் சிங்கப்பூரை முதன்முறையாகப் பிரதிநிதித்தனர். “முழுப் போட்டியும் உணர்ச்சிமிகுந்ததாக இருந்தது,” என்றார் அமந்தீப்.

சென்ற ஆண்டு ஆசிய வலைப்பந்து போட்டிகளில் தன் சக விளையாட்டாளருடன் தன் 50வது அனைத்துலக ஆட்டத்தில் பங்கேற்றது மறக்கமுடியாத நிகழ்ச்சி எனக் குறிப்பிட்டார் அமந்தீப். இவ்வாண்டு துபாய் நே‌‌ஷன்ஸ் கிண்ணத்தில் 50 விளையாட்டுகளை எட்டினார் ரீனா.

“மலேசியாதான் நம் ஆக வலுவான எதிரணியினர். அண்மைய சிங்லைஃப் நே‌‌ஷன்ஸ் கிண்ண வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இன்னும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம்,” என்றார் ரீனா.

“புதிய பயிற்றுவிப்பாளர் தாராவின் உத்திமுறைகள் பலனளித்துள்ளன,” என்றார் அமந்தீப்.

அவர்களது சக விளையாட்டாளர் கே.மி‌‌‌ஷாலினி, 23, காலில் ஏற்பட்ட அடியிலிருந்து மீண்டுவந்த வெற்றிக் கதைக்கு உரிமையாளர்.

எட்டு வயதிலிருந்து வலைப்பந்து விளையாடியுள்ள மி‌‌‌ஷாலினிக்கு, தன் தேசிய பள்ளி விளையாட்டுகளின் கடைசிப் பருவத்தின்போது முழங்காலில் அடிபட்டது. தொடக்கக் கல்லூரியிலும் வலி தொடர்ந்தபோது, தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்தது.

“அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டுவருவது மிகக் கடினம். வலைப்பந்தை நிறுத்தவேண்டியிருக்கும் என அஞ்சினேன்,” என்றார் மி‌‌‌ஷாலினி. ஓராண்டு இயன்முறை மருத்துவத்துக்குப் பின்பும், வலைப்பந்தில் தன் 100 விழுக்காட்டைக் கொடுக்கச் சிரமப்பட்டார்.

விளையாட்டை விட்டுவிடலாமென முடிவுசெய்தபோதுதான் தன் நெடுங்காலப் பயிற்றுவிப்பாளர் கோக் மன் வாய், மி‌‌‌ஷாலினிக்குத் தன் ஆற்றலை நினைவூட்டினார். அந்த ஊக்குவிப்பே அவரது வலைப்பந்துப் பயணத்துக்கு மறுமலர்ச்சியளித்தது.

உயரிய இலக்குகளை நோக்கிச் செல்லும் கே மி‌‌‌ஷாலினி (நடுவில்).
உயரிய இலக்குகளை நோக்கிச் செல்லும் கே மி‌‌‌ஷாலினி (நடுவில்). - படம்: ரோன் லோ

2023 தேசிய சூப்பர் லீக்கில் ஆக மேன்மையடைந்த U-21 விளையாட்டாளராக அவர் வாகைசூடினார். சென்ற ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் சிங்கப்பூருக்காகத் தன் முதல் தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

“பல்லாண்டுகால உழைப்புக்குப் பின் இன்று தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் பெருமைவாய்ந்த தருணம். என் தாயார், சகோதரியும் நான் விளையாடுவதைக் காண தாய்லாந்துக்கு வருகின்றனர்!,” என்றார் மி‌‌‌ஷாலினி.

2023, 2024 மர்க்சஸ் நே‌‌ஷன்ஸ் கிண்ணங்களில் முறையே தங்கம், வெள்ளியும், 2025 சிங்லைஃப் நே‌‌ஷன்ஸ் கிண்ணத்தில் வெள்ளியும் சிங்கப்பூர் வென்றுள்ளது.

நவம்பர் 18ஆம் தேதியன்று வலைப்பந்து அணியின் பயிற்சிக்கு, சிங்கப்பூர் வலைப்பந்தின் முன்னாள் அணித் தலைவரும் 2015ல் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற அணியில் முக்கிய உறுப்பினராகவும் இருந்த ‌‌ஷர்மெய்ன் சோ, நேரில் வந்து ஊக்கமளித்தார்.

தங்கத்தை வெல்லும் இலக்குடன் வலைப்பந்து அணி களமிறங்குகிறது.

குறிப்புச் சொற்கள்