ஸூரிக்: புதிய காற்பந்து கணினி விளையாட்டைத் தங்கள் தளத்தில் வெளியிடப்போவதாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.
அடுத்த காற்பந்து உலகக் கிண்ணம் 2026ல் நடைபெறுகிறது. அதையும் பயன்படுத்தி தங்களின் கணினி விளையாட்டுத் துறையை மேலும் வளர்க்க நெட்ஃபிளிக்ஸ் எண்ணம் கொண்டுள்ளது.
நெட்ஃபிளிக்சில் இடம்பெறவுள்ள புதிய காற்பந்துக் கணினி விளையாட்டை டெல்ஃபி இன்டரேக்டிவ் (Delphi Interactive) நிறுவனம் தயாரித்து வெளியிடும். அந்நிறுவனம், அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்துடன் இணைந்து புதிய காற்பந்து விளையாட்டை உருவாக்கும்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும். அதற்கு ஏற்றவாறு புதிய காற்பந்துக் கணினி விளையாட்டு வெளியிடப்படும் என்று நெட்ஃபிளிக்ஸ் கூறியது.
இந்தக் கூட்டு முயற்சி ஓர் எதிர்பாரா நிகழ்வாக சில தரப்பினரால் பார்க்கப்படுகிறது. இத்தகைய விளையாட்டுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை விளையாடுவது சவாலாக இருந்து வந்துள்ளது. இந்த ஏற்பாடு அதனை எளிதாக்குவதாகக் கூறப்படுகிறது.
“விசையை மட்டும் அழுத்தியபடி விளையாடக்கூடிய ஓர் அடிப்படை விளையாட்டாகக் காற்பந்தை மறுபடியும் விளங்கச் செய்வது எங்கள் நோக்கம்,” என்று நெட்ஃபிளிக்சின் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அலெயர் டஸ்கான் கூறினார்.
இந்த ஏற்பாடு, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தொழில்நுட்பப் புத்தாக்க முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல் என்றார் அதன் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ.

