தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வலைப்பயிற்சிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்களைத் தேடும் வெளிநாட்டு கிரிக்கெட் அணி

1 mins read
3a8942d0-b546-4f36-8312-0113ba5d09af
இம்மாதம் 20-24ஆம் தேதிவரை இந்தியாவில் நடக்கவிருக்கும் பயிற்சி முகாமில் நெதர்லாந்து அணி பங்கேற்கவுள்ளது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

ஆம்ஸ்டர்டாம்: இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நெதர்லாந்து கிரிக்கெட் அணி தகுதிபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியச் சூழலுக்கேற்றவாறு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நெதர்லாந்து அணி முனைப்பு காட்டி வருகிறது.

அதன்படி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள அலூரில் இம்மாதம் 20-24ஆம் தேதி வரை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்திய ஐந்து நாள் பயிற்சி முகாமில் அவ்வணி பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில், அந்தப் பயிற்சி முகாமின்போது தங்களுக்கு உதவ உள்ளூர்ப் பந்துவீச்சாளர்கள் தேவை என்று நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகம் வழியாக விளம்பரம் செய்துள்ளது.

வலக்கை, இடக்கை வேகப் பந்துவீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்று அவ்விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான பயணம், தங்குமிடம், உணவு போன்ற செலவுகளை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியமே ஏற்றுக்கொள்ளும்.

கட்டாயமில்லை என்றபோதிலும், வெளிநாட்டிலிருந்து வரும் அணிகளுக்கு இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வாரியங்களே வலைப் பந்துவீச்சாளர்களை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வகையில், அலூரு நகரிலுள்ள சிறந்த பந்துவீச்சாளர்களை நெதர்லாந்து அணியின் வலைப்பயிற்சிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகக் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்