தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
உலகக் கிண்ண கிரிக்கெட்: நெதர்லாந்திடம் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா

அதிர்ச்சிகளிலேயே பேரதிர்ச்சி!

2 mins read
c7f5118b-eb01-4895-8a08-7236322603ea
தென்னாப்பிரிக்க ஆட்டக்காரரை வெளியேற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் நெதர்லாந்து வீரர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

தர்மசாலா: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று நாள்களில் இரு பெரிய அணிகள் தோற்றுப்போனது விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இங்கிலாந்து அதிர்ச்சியளிக்க, செவ்வாய்க்கிழமை அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் (ஐசிசி) முழு உறுப்பினராக உள்ள தென்னாப்பிரிக்க அணி, இணை உறுப்பினராக (அசோசியேட்) இருக்கும் நெதர்லாந்திடம் தோற்று மண்ணைக் கவ்வியது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண டி20 தொடரிலும் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இவ்வாண்டு உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியையும் நெதர்லாந்து முடக்கிப் போட்டது குறிப்பிடத்தக்கது.

தர்மசாலாவில் தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீசியது.

தென்னாப்பிரிக்க அணியினரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஒருகட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை மட்டுமே அவ்வணி எடுத்திருந்தது.

ஆயினும், அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் (78*), ரூலாஃப் வான் டெர் மெர்வ (29), ஆர்யன் தத் (23*) ஆகியோர் கடைசி ஓவர்களில் அதிரடியாகப் பந்தடித்தனர். இதனால், நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள் என நல்லதோர் எண்ணிக்கையை எட்டியது.

ஏழாவது விக்கெட் விழுந்தபிறகு, அதாவது கடைசி 9.1 ஓவர்களில் அவ்வணி 105 ஓட்டங்களைக் குவித்தது.

அடுத்து பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி எட்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இரு சதங்களை அடித்துள்ள குவின்டன் டி காக் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் அணித்தலைவர் டெம்பா பவுமா (16), எய்டன் மார்க்ரம் (1), ராஸி வான் டெர் டுஸன் (4) என அடுத்தடுத்து மூவரை இழக்க, தென்னாப்பிரிக்க அணி 44-4 எனத் தத்தளித்தது.

பின்னர் களம் கண்டோரில் டேவிட் மில்லர் (43), கேசவ் மகராஜ் (40) இருவரும் சற்றுத் தாக்குப்பிடித்தபோதும், தென்னாப்பிரிக்க அணியால் வெற்றிக்கரை சேர இயலவில்லை.

இறுதியில், 42.5 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து, 207 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 38 ஓட்டங்களில் அவ்வணி தோல்வியடைந்தது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண வரலாற்றில் நெதர்லாந்து இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அவ்வணிக்குக் கிட்டிய மூன்றாவது வெற்றி இதுதான்.

குறிப்புச் சொற்கள்