தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புனே டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி

12 ஆண்டு சாதனையை இழந்த இந்தியா

2 mins read
0567c4fa-79d3-4605-89c8-28c0e59d0c57
இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவில், நியூசிலாந்து அணித்தலைவர் டாம் லதாமுக்கு வாழ்த்து கூறும் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா. - படம்: ஏஎஃப்பி

புனே: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 26) தோல்வியுற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முன்னணி அணியாகத் திகழ்ந்து வந்துள்ள இந்தியா, அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ஓட்டங்களும் இந்திய அணி 156 ஓட்டங்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் என்ற நிலையில், நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை சனிக்கிழமை தொடர்ந்தது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 231ஆக இருந்தபோது, டாம் பிளண்டல் 41 ஓட்டங்களிலும் கிளென் ஃபிலிப்ஸ் 48 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் 255 ஓட்டங்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் நான்கு விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரே கைப்பற்றினர். ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப் வேகம் புனே மைதானத்தில் எடுபடாமல் போனது.

359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. இந்திய அணி 34 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அணித்தலைவர் ரோஹித் சர்மா எட்டு ஓட்டங்களில் சான்ட்னர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கிச் செயல்பட்டனர்.

இந்தியா 96 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

விராத் கோஹ்லி 17 ஓட்டங்களிலும் ரிஷப் பன்ட் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஓட்டங்களைச் சேர்த்த ஜெய்ஸ்வால், 77 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் 21 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் கான் ஒன்பது ஓட்டங்களையும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

60.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இரண்டாவது இன்னிங்சில் அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் 29 ஓவர்கள் வீசி 104 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 12 ஆண்டுகளாக தோல்வியுறாத இந்திய அணியின் சாதனையை நியூசிலாந்து தகர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்