தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்திவரும் இந்திய வம்சாவளி வீரர்

1 mins read
bfae2d04-8db7-40d5-a841-816f240a58a0
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக் கிண்ணப் போட்டியில் 116 ஓட்டங்களை விளாசிய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா. - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: முதன்முறையாக உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியபோதும் தமது சிறப்பான செயல்பாட்டால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நியூசிலாந்து அணிக்காக விளையாடிவரும் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா, 23.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ரச்சின் இரண்டு சதம், இரண்டு அரைசதம் உட்பட 406 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இடக்கை ஆட்டக்காரரான இவர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐந்துமுறை உலகக் கிண்ண வெற்றியாளரான ஆஸ்திரேலிய அணிக்கெதிராக சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 89 பந்துகளில் 116 ஓட்டங்களை விளாசியிருந்தார் 23 வயதான ரச்சின். ஆயினும், அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து ஐந்து ஓட்டங்களில் தோற்றுப்போனது.

போட்டி முடிந்தபின், அவரது ஆட்டம் எதிர்பார்ப்பை விஞ்சுவதாக இருந்ததா என்று செய்தியாளர்கள் ரச்சினிடம் கேட்டனர்.

அதற்கு, “அப்படித்தான் நினைக்கிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.

இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தவரான ரச்சினுக்கு இந்தியாவில் பேராதரவு கிடைத்து வருகிறது.

“குழந்தையாக இருக்கும்போது, பார்வையாளர்கள் உங்கள் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பது எல்லாரது கனவாகவும் இருக்கும். தர்மசாலா அரங்கில் பலருக்கும் அக்கனவு நனவாகி இருக்கும். அது சிறப்புமிக்க தருணம்,” என்று ரச்சின் சொன்னார்.

ஆறு ஆட்டங்களில் நான்கில் வென்று எட்டுப் புள்ளிகளுடன் பட்டியலின் மூன்றாம் நிலையில் இருக்கிறது நியூசிலாந்து. அடுத்ததாக, அவ்வணி தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை எதிர்த்தாடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்