லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் வீழ்த்தியது.
இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) ஸ்பர்சின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு முன்பு, கடந்த ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் நியூகாசல் திணறியது.
எனவே, ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, நியூகாசலின் நிர்வாகி எடி ஹாவ் மீது இருந்த அழுத்தம் சற்று குறைந்துள்ளது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து நியூகாசல் ஆதிக்கம் செலுத்தியது.
கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தும் அக்குழு அவற்றில் பலவற்றை நழுவவிட்டது.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் நியூகாசலின் ஜோ வில்லோக் கோல் போட்டார்.
ஆனால் ‘ஆஃப்சைட்’ காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இடைவேளைக்கு முன்பு நியூகாசல் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் நியூகாசல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
மனந்தளராமல் கோல் வேட்டையில் இறங்கிய நியூகாசல், நான்கு நிமிடங்கள் கழித்து அதன் வெற்றி கோலைப் போட்டது.
நியூகாசலின் வெற்றி கோலை ஜேகப் ரேம்சி போட்டார்.

