நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் நியூகாசல் யுனைடெட், அதன் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரரான அலெக்சாண்டர் இசாக்கை இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஆக அதிகமாக 125 மில்லியன் பவுண்டுக்கு (S$217 மில்லியன்) விற்க லிவர்பூலுடன் இணக்கம் கண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதையடுத்து, இசாக் லிவர்பூலுக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இசாக், லிவர்பூலில் சேர்ந்து விளையாடுவது தொடர்பாக நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது.
இத்தகவலை பிரிட்டனின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூஸ், தி அத்லெட்டிக் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டன.
இதுதொடர்பாக நியூகாசலும் லிவர்பூலும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த பருவத்தில் லீக் பட்டியலில் நியூகாசல் ஐந்தாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நியூகாசலுக்காக 23 கோல்கள் போட்டு அதை வெற்றியின் பாதையில் கொண்டு சென்ற பெருமை இசாக்கைச் சேரும்.
அதுமட்டுமல்லாது, லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் லிவர்பூலுக்கு எதிராக நியூகாசலின் வெற்றி கோலைப் போட்டார் இசாக். அதன் விளைவாக ஏறத்தாழ 70 ஆண்டுகள் கழித்து நியூகாசல் கிண்ணம் ஏந்தியது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இசாக்கிற்கும் நியூகாசல் குழுவின் நிர்வாகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுத்த வாக்கை நியூகாசலின் நிர்வாகம் காப்பாற்றவில்லை என்றும் தாம் நியூகாசலைவிட்டுச் செல்ல விரும்புவதாக ஆதரவாளர்களிடம் பொய்த் தகவல் வெளியிட்டனர் என்றும் இசாக் அதிருப்தி தெரிவித்தார்.