லீக் கிண்ணத்தில் நியூகாசல், ஸ்பர்ஸ், எவர்ட்டன் வெற்றி

லீக் கிண்ணத்தில் நியூகாசல், ஸ்பர்ஸ், எவர்ட்டன் வெற்றி

2 mins read
eb862bd8-7f65-48cf-9678-d90040485006
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் நியூகாசலின் முதல் கோலைப் போட்டார் பாசுமனா டோரே (இடமிருந்து இரண்டாவது). - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நியூகாசல்: புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற இங்கிலிஷ் லீக் கிண்ணப் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நியூகாசில் யுனைடெட் அணி 3-2 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் பிரோம்விச் ஆல்ஃபியன் அணியை வீழ்த்தி, போட்டித் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் வெஸ்ட் பிரோம் ஆட்டக்காரர் ஐசக் பிரைஸ் போட்ட கோலால் நியூகாசில் அணி ஆரம்பத்தில் பின்தங்கியது. இருப்பினும், புதிய ஆட்டக்காரர் பாசுமனா டோரே 38வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். அதன்பின் களமிறங்கிய மாற்று ஆட்டக்காரர் ஹார்வி பார்ன்ஸ் 48வது நிமிடத்தில் அற்புதமாக கோல் போட்டு நியூகாசல் அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

76வது நிமிடத்தில் லுயிஸ் ஹால் செய்த தவறால் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஐசக் பிரைஸ் மீண்டும் போட்டியை சமன் செய்தபோதிலும், 81வது நிமிடத்தில் ஹார்வி பார்ன்ஸ் தனது இரண்டாவது கோலை அடித்து நியூகாசல் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஆட்டத்துக்கு முன்னதாக, மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து 52 மில்லியன் பவுண்டு தொகையில் நியூகாசல் அணிக்கு மாறிய ஸ்பானிய மத்தியத் திடல் ஆட்டக்காரர் நிக்கோ கொன்சாலஸ் ரசிகர்கள் முன் அறிமுகப்படுத்தப்பட்டார்.

மற்றோர் ஆட்டத்தில், எவர்ட்டன் அணி 4-0 எனும் கோல் கணக்கில் பிரெஸ்டன் நார்த் எண்ட் அணியை வீழ்த்தியது. இதில் தியர்னோ பேரி 25, 59 மற்றும் 70வது நிமிடங்களில் கோல்கள் போட்டு ‘ஹேட்ரிக்’ சாதனை படைத்தார். பிரென்னன் ஜான்சன் நான்காவது கோலை அடித்தார்.

வடக்கு லண்டனில் நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 5-1 எனும் கோல் கணக்கில் சார்ல்டன் அட்லெடிக் அணியை வீழ்த்தியது. மைக்கி மூர், டொமினிக் சோலன்கே, கெவின் டான்சோ, அறிமுக ஆட்டக்காரர் சாவின்ஹோ மற்றும் பென் டேவிஸ் ஆகியோர் ஸ்பர்ஸ் அணிக்காக கோல்களைப் போட்டனர்.

பிற ஆட்டங்களில், பிராட்ஃபர்ட் சிட்டி அணி பெனால்டி சூட்-அவுட் முறையில் 4-2 என பெர்ன்லி அணியை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற போட்டியில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் அணி மட்டுமே, லீக் கிண்ணப் போட்டியிலிருந்து இதுவரை வெளியேறிய ஒரே பிரீமியர் லீக் அணியாகும். ஐரோப்பியப் போட்டிகளில் பங்கேற்காத 11 பிரீமியர் லீக் அணிகள் இந்த இரண்டாம் சுற்றில் களமிறங்கிய நிலையில், மீதமுள்ள 9 அணிகள் மூன்றாவது சுற்றில் விளையாடவுள்ளன.

குறிப்புச் சொற்கள்