லண்டன்: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் லிவர்பூலை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது நியூகாசல் யுனைடெட்.
2-1 எனும் கோல் எண்ணிக்கையில் நியூகாசல் வென்றது. இதன் மூலம் 56 ஆண்டுகளில் முதன்முறையாக அக்குழு கிண்ணம் ஒன்றை வென்றிருக்கிறது.
டேன் பர்ன், அலெக்சாண்டர் ஈசாக் ஆகியோர் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நியூகாசலின் கோல்களைப் போட்டனர். ஆட்டம் முடியவிருந்த தருணத்தில் ஃபடிரிக்கோ கியேசா, லிவர்பூலுக்கு ஒரு கோலைப் போட்டு நியூகாசல் ரசிகர்களுக்கு சிறிதளவு பதற்றத்தை ஏற்படுத்தினார்.
இறுதியில் நியூகாசல் வாகை சூடியது. ஆட்டம் முடிந்ததும் வெம்பிலி விளையாட்டரங்கில் திரண்டிருந்த நியூகாசல் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். பெரிய அளவில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த அக்குழுவை இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நன்கு மேம்படச் செய்தது மட்டுமின்றி கிண்ணம் வெல்வதற்கான பல ஆண்டு ஏக்கத்தையும் தீர்த்து வைத்துவிட்டார் நிர்வாகி எடி ஹாவ்.
அதோடு, 17 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலாந்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் எஃப்ஏ கிண்ணம் அல்லது கரபாவ் கிண்ணத்தை வென்றிருக்கிறார். கடைசியாக 2008ஆம் ஆண்டில் ஹேரி ரெட்னேப் போர்ட்ஸ்மத் நிர்வாகியாக வாசை சூடி எஃப்ஏ கிண்ணத்தை வென்றார்.
மேலும், 21 ஆண்டுகளில் முதன்முறையாக கரபாவ் கிண்ணத்தை வென்றிருக்கும் முதல், இங்கிலாந்தைச் சேர்ந்த நிர்வாகி என்ற பெருமையையும் ஹாவ் பெற்றுள்ளார்.