தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; அதிர்ச்சி அளித்த அதிரடி ஆட்டக்காரர்

2 mins read
8948d78b-269d-4f17-b946-5cbfe44ce629
அண்மையில் நடந்து முடிந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல் ) போட்டிகளில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக 524 ஓட்டங்களை விளாசினார் நிக்கலஸ் பூரன். - படம்: ஏஎஃப்பி

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அண்மையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டிகளுக்குத் தம்மைத் தேர்வுசெய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் பூரன். கடந்த 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்று வெளியேறியபின் அவர் அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

சென்ற ஆண்டு நவம்பரில் தமது 100வது அனைத்துலக டி20 போட்டியில் பூரன் விளையாடினார்.

அப்போது, தன்னால் மேலும் 100 போட்டிகளில் விளையாட முடியும் எனக் கூறியிருந்த நிலையில், ஓய்வுபெறுவதாக இப்போது அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

தமது ஓய்வு முடிவு பற்றி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பூரன், “நீண்ட யோசனைக்குப் பிறகு, அனைத்துலகப் போட்டிகளிலிருந்து விடைபெறுவது என முடிவெடுத்துள்ளேன். வெஸ்ட் அணி சார்பில் திடலில் களமிறங்கிய ஒவ்வொரு முறையையும் வார்த்தைகளால் வருணிப்பது கடினம். அத்துடன், தலைவராக இருந்து அணியை வழிநடத்தியது என் நெஞ்சில் என்றென்றும் நீங்கா நினைவுகளாக நிலைத்திருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீதான தனது அன்பு ஒருபோதும் குறையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அனைத்துலக அரங்கில் அடியெடுத்து வைத்த பூரன், 61 ஒருநாள் போட்டிகளில் 1,983 ஓட்டங்களையும் 106 டி20 போட்டிகளில் 2,275 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இப்போதைக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடியவரும் அதிக ஓட்டங்களைக் குவித்தவராகவும் திகழ்கிறார் பூரன்.

அண்மையில் நடந்து முடிந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல் ) போட்டிகளில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக பூரன் 524 ஓட்டங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்