அட்லாண்டா: உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துக்கு எதிராக அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் பெற்ற வெற்றியில், நடுவர்களின் செயல்பாடு பாரபட்சமாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, போட்டி அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர் என்று ஃபிஃபா நடுவர்க் குழுத் தலைவர் பியர்லூயிஜி கொலினா ஆதரித்துப் பேசியுள்ளார்.
வியாழக்கிழமை (ஜூலை 9), inside.fifa.com-ல் வெளியான ஒரு நேர்காணலில், நடுவர்களை விமர்சிப்பது காற்பந்து விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று கொலினா கூறினார். ஆனால், தோல்வியைத் தொடர்ந்து நடுவர் செயல்பாடு குறித்து எகிப்து புகார் அளித்த பின்னர், அதிகாரிகளின் நேர்மையைக் கேள்விக்குட்படுத்துவதை அவர் கண்டித்தார்.
“முடிவுகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதம் எப்போதும் காற்பந்தாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு நமது விளையாட்டில் இடமில்லை,” என்று கொலினா கூறினார்.
ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் அதிகாரிகளின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஃபிஃபா நடுவர் தீர்ப்பை யாராலும், அது ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உட்பட, தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என்று யாரும் கூற முடியாது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நடுவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிராக அச்சுறுத்தல்களைத் தூண்டக்கூடும் என்று கொலினா கூறினார்.
அர்ஜென்டினா 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் அடித்த கோல் மூலம் வெற்றியைத் தட்டிப் பறித்ததால், எகிப்து அணி போட்டியிலிருந்து வெளியேறியது. இருப்பினும், தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக அது குற்றம் சாட்டியது.
அர்ஜென்டினாவை உலகக் கிண்ணத் தொடரில் தக்கவைப்பதற்காக நடுவர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என ஆட்டத்திற்குப் பிறகு எகிப்தின் பயிற்றுநர் ஹொசாம் ஹசன் குற்றம் சாட்டினார்.
மேலும், “பல முக்கிய சம்பவங்கள் கடுமையான கவலைகளை எழுப்பியதோடு, ஆட்டத்தின் போக்கை நேரடியாகப் பாதித்த முடிவுகளின் நிலைத்தன்மை மற்றும் நியாயம் குறித்து ஆழ்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன,” என்று எகிப்திய காற்பந்துச் சங்கம் கூறியது.

