மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி குழுவுடன் பொருதுவதில் பயம் காட்டாத குழுக்கள், தங்களது ஆட்ட உத்திகளை மாற்றியுள்ளதாக மேன்சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கூறியுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள் சிரமமாகியுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது சாம்பியன்ஸ் லீக் பட்டியலில் 25வது இடத்திற்கு சிட்டி தள்ளப்பட்டுள்ளது.
“எங்களுக்கு எதிராக விளையாடும் குழுக்கள் அனைத்தும் தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இதனால் தாக்குதலில் ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகிறது,” என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கார்டியோலா சொன்னார்.
“இந்தப் புதிய சூழலுக்கு நாங்கள் எங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில், சாம்பியன்ஸ் லீக்கில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு நாங்கள் தகுதிபெற இயலாது,” என்றார் அவர்.
அண்மையில் சிட்டியின் ஆட்டத்திறன் குறைந்துள்ளதால் 13 ஆட்டங்களில் ஒரே ஆட்டத்தில் மட்டும் அது வென்றுள்ளது. ரோட்ரி போன்ற முக்கிய ஆட்டக்காரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாலும் தற்காப்புப் பிரிவு வலுவிழந்துள்ளதாலும் சிட்டி தடுமாறி வருகிறது.
கிண்ணத்தை வெல்லும் அதே முக்கியத்துவம் சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெறுவதிலும் உள்ளதாக கார்டியோலா நம்புகிறார்.
தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சிட்டி உள்ளது. முதலிடத்தில் உள்ள லிவர்பூலைவிட அது 12 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறவிருந்த லீக் ஆட்டத்தில், பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியுடன் சிட்டி பொருதவிருந்தது.