தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இப்போதைக்கு ஓய்வு இல்லை: மனந்திறந்தார் ரோகித் சர்மா

2 mins read
0490d925-b766-4ac0-a89a-353ca0576338
மூன்று போட்டிகளிலும் சேர்த்து 31 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததால் நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட ரோகித் சர்மா. - படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் சொந்தக் காரணங்களுக்காக ரோகித் விளையாடவில்லை. வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்திய அப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

அதன்பிறகு ரோகித்தின் தலைமையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றுப்போனது; ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிந்தது.

அம்மூன்று போட்டிகளிலும் சேர்த்து ரோகித் 31 ஓட்டங்களை மட்டும் எடுத்ததால், அவர் ஓய்வுபெற வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், ஐந்தாவது போட்டியில் அவர் விளையாடாததும் அதற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.

இந்நிலையில், தான் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லாததால் தானாகவே முன்வந்து ஐந்தாவது போட்டியிலிருந்து விலகிவிட்டதாக ரோகித் தெரிவித்துள்ளார்.

“சிட்னியில் விளையாட வேண்டாம் என்பது குறித்து வெகுநேரம் சிந்தித்தேன். பின்னர் சிட்னி வந்த பிறகு முடிவு எடுக்கப்பட்டது. மெல்பர்னில் நடந்த போட்டிக்குப் பிறகு புத்தாண்டு நாள் என்பதால் அன்று பயிற்றுநரிடமும் தேர்வாளரிடமும் அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. பின்னரே அவர்களிடம் இந்த முடிவை தெரிவித்தேன்.

“ஐந்தாவது போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது என்பதால் எங்களின் வெற்றியே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது,” என்று ரோகித் கூறினார்.

மேலும், “ஐந்தாவது போட்டியில் தான் விளையாடாதபோதும் இது ஓய்வு முடிவன்று. ஐந்து மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் ஓட்டம் குவிக்க மாட்டேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

“நான் எப்போது செல்ல வேண்டும், எப்போது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் தீர்மானிக்க முடியாது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்