பியோங்யாங்: பாரிஸ் நகரில் அண்மையில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப்பந்து விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வடகொரியாவின் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் இருவரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
வெற்றி மேடையில் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து தம்படம் எடுத்துக்கொண்டபோது அவர்கள் இருவரும் சிரித்ததால், அவர்கள்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நாடு திரும்பிய வடகொரிய விளையாட்டாளார்கள் அனைவரும் தற்போது ‘கருத்தியல் மதிப்பீட்டிற்கு’ உட்படுத்தப்படுவதாக ‘தி டெலிகிராஃப்’ செய்தி கூறுகிறது.
வெளிநாட்டுக் கலாசாரங்களால் அவர்கள்மீது ஏதேனும் மாசு படிந்திருந்தால் அதனை அகற்றும் நோக்கில் அம்மதிப்பீடு இடம்பெறுகிறது என்றும் வடகொரியாவில் அது வழக்கமான நடைமுறைதான் என்றும் ‘தி டெய்லி என்கே’ செய்தி தெரிவிக்கிறது.
தென்கொரியாவை வடகொரியா எதிரியாகக் கருதுகிறது. இந்நிலையில், ரி, கிம் இருவரும் தென்கொரிய விளையாட்டாளர்களோடு சேர்ந்து சிரித்தபடி படமெடுத்துக்கொண்டதற்காகக் கடுமையாகக் கடிந்துகொள்ளப்பட்டனர் என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் இணையத்தில் பரவிய நிலையில், அது விளையாட்டின் நேர்மை மனப்பான்மையையும் எல்லை தாண்டிய ஒற்றுமையையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது என்று சொல்லப்பட்டது.
தென்கொரியாவின் லிம் ஜோங் ஹூன் எடுத்த அந்தத் தம்படத்தில், தங்கம் வென்ற சீன விளையாட்டாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, தென்கொரியா அல்லது வெளிநாட்டு விளையாட்டாளர்களுடன் கலந்துறவாடக்கூடாது என்று ஒலிம்பிக் போட்டிக்குமுன் வடகொரியப் போட்டியாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதனைமீறி நடந்துகொள்வோர்மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

