இந்த ஜனவரி மாதம் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கு புது வீரர்களின் வரவு இல்லை என்றால் அது நெருப்போடு விளையாடுவதற்கு சமம் என்று கூறியுள்ளார் அந்தக் குழுவின் நிர்வாகி ஆங்கே போஸ்ட்கோக்குலு.
அவர் நிர்வகிக்கும் ஸ்பர்ஸ் குழுவில் பல வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருப்பதால், இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் அந்தக் குழு தடுமாற்றத்தில் உள்ளது.
பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் ஸ்பர்ஸ் குழு 15வது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆட்டங்களில் அவருடைய ஸ்பர்ஸ் குழு ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. அதேவேளை, அது ஏழு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி அடுத்த பட்டியலுக்கு கீழிறங்கும் அபாயத்தில் உள்ளது.
பிரிமியர் லீக் குழுக்களில் ஸ்பர்ஸ் குழுவில்தான் ஆக அதிகமாக காயமடைந்த வீரர்கள் உள்ளனர் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன. புதிதாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட டோமினிக் சொலாங்கே உள்பட 12 வீரர்கள் காயமடைந்தோர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால் மூட்டுப் பகுதியில் எற்பட்ட காயம் காரணமாக திரு சொலாங்கே ஆறு வாரங்களுக்கு தமது குழுவுக்கு விளையாட முடியாத நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காயம் காரணமாக விளையாட முடியாத வீரர்களுக்காக குழுவின் நிர்வாகி போஸ்டகோக்குலு பல இளவயது வீரர்களை களத்தில் இறக்கியுள்ளார். அத்துடன், குழுவின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநருடன் புது வீரர்களை வாங்குவது குறித்து தினசரி தொடர்பில் இருப்பதாகவும் திரு போஸ்டகோக்குலு கூறினார்.
“இங்குள்ள தெள்ளத்தெளிவான நிலையைத்தான் நான் எடுத்துக் கூறுகிறேன். இதற்கு மாறாக நான் கூறினால், அது முட்டாள்தனமாக இருக்கும். குழுவுக்கு புது வீரர்களின் வரவு தேவைப்படுகிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
“புதிய வீரர்களைக் கொண்டு வராமல் இருப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். அதேவேளை, குழு நிர்வாகம் நிலைமையை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது,” என்றார் திரு போஸ்டகோக்குலு.