தகுதிச் சுற்றில் வெல்பவருடன் மோதவிருக்கும் ஜோக்கோவிச்

1 mins read
dcb01405-3bdf-4fc8-b0d5-f5a19ce73b25
11வது முறையாக ஆஸ்திரேலியப் பொது விருதுப் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் நோவாக் ஜோக்கோவிச், 36. - படம்: இபிஏ

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார்.

ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11வது ஆஸ்திரேலியப் பொது விருதாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட் சிலாம் பட்டமாக இருக்கும்.

கடந்த வாரம் நடந்த ஐக்கியக் கிண்ணப் போட்டியின்போது 36 வயது ஜோக்கோவிச் மணிக்கட்டில் காயமுற்றார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடனான அந்த ஆட்டத்தில் அவர் தோற்றுப்போனார். கடந்த ஆறு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அவர் தோற்றது இதுவே முதன்முறை.

ஆஸ்திரேலியப் பொது விருதை வெல்வதன்மூலம் அந்த ஏமாற்றத்தை அவர் பின்னுக்குத் தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 14ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

குறிப்புச் சொற்கள்