அபுதாபி: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த ஆக அதிக வயதான ஆட்டக்காரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் ஓமான் அணியின் ஆமிர் கலீம்.
ஆசியக் கிண்ண டி20 தொடரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) நடந்த ஆட்டத்தில் கலீம் இப்பெருமையைத் தேடிக்கொண்டார். 43 ஆண்டுகள் 303 நாள்கள் வயதான அவர் 64 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன்மூலம் 79 ஆண்டுகாலச் சாதனையை கலீம் தகர்த்தெறிந்தார். முன்னதாக, 1946ஆம் ஆண்டு ஓல்டு டிராஃபர்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நட்சத்திரம் வேலி ஹேமண்ட் 69 ஓட்டங்களை எடுத்திருந்ததே முன்னைய சாதனை. அப்போது அவருக்கு வயது 43 ஆண்டுகள் 31 நாள்கள்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓட்டங்களைக் கடந்த ஆக வயதானவர் என்ற பெருமையும் கலீமைச் சென்றடைந்தது.