ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு: சூர்யகுமார் யாதவ்

மூன்றாம் முறையாக டி20 உலகக் கிண்ணம் வென்று இந்தியா சாதனை

ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு: சூர்யகுமார் யாதவ்

2 mins read
adb170f5-1e7a-4ff4-9cf7-f31f525d740a
டி20 உலகக் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்ட மகிழ்ச்சியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3
Google News Preferred Icon

அகமதாபாத்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்திய அணி மூன்றாவது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அடுத்ததாக, 2028ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதே தங்களது இலக்கு என்று இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு நடந்த டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 96 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆட்டநாயகன் விருதையும் 89 ஓட்டங்களை விளாசிய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தொடர்நாயகன் விருதையும் வென்றனர்.

“கடந்த ஒரு மாதம் ஓர் அற்புதமான பயணமாக அமைந்தது. நாங்கள் விரும்பியபடி அது தொடங்கவில்லை என்றாலும், அது விளையாட்டின் ஒரு பகுதிதான்,” என்று போட்டிக்குப் பிந்திய செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யா கூறினார்.

“இன்று வரையிலான பயணம் மிகவும் சிறப்பானது. ஓர் அணியாக நாங்கள் எதனைச் சாதித்திருக்கிறோம் என்பதற்கு இதோ உங்கள் முன்னால் இருக்கும் வெற்றிக் கிண்ணமே சான்று. அடுத்த இலக்கு ஒலிம்பிக் தங்கம்தான்,” என்றும் அவர் சொன்னார்.

1900ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, முதன்முறையாக கிரிக்கெட்டைச் சேர்க்க அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 2028 ஜூலை 14 முதல் 29 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் மோதவுள்ளன.

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் தற்போதைய டி20 தரவரிசையின்படி, ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஆசியாவிலிருந்து இந்தியா தகுதிபெற உள்ளது. அனைத்துப் போட்டிகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொமோனா நகரில், தற்காலிகமாக அமைக்கப்படும் ஃபேர்கிரவுண்ட்ஸ் அரங்கில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்