பாரிஸ்: லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 1984ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட்ட அமெரிக்காவின் விவியேன் ராபின்சன் அதன்பால் ஈர்க்கப்பட்டார்.
அமெரிக்காவின் சாண்டா மோனிக்கா நகரைச் சேர்ந்த விவியேன், கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகருக்குச் சென்று போட்டிகளை நேரடியாகக் கண்டு வருகிறார். இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர் ஏழாவது முறையாக வந்திருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவைப் பார்ப்பதற்கும் 36 போட்டிகளைப் பார்ப்பதற்குமான நுழைவுச் சீட்டுகளுக்கு 66 வயதாகும் விவியேன் இதுவரை US$10,000 (S$13,434) செலவு செய்துள்ளார். இரண்டு வேலைகளைச் செய்து அதன் மூலம் ஈட்டிய பணத்தை அவர் ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செலவழித்துள்ளார்.
போட்டிகளை நேரடியாகக் காணவில்லை என்றால் அவர் பாரிஸ் நகரிலுள்ள சாம்ப்ஸ் எலிசீஸ் எனும் இடத்தில் முன்னைய ஒலிம்பிக் போட்டிகளில் சேகரித்த நினைவுப் பொருள்களுடன் நடந்து செல்வார். அதைப் பார்க்கும் மக்கள் அவருடன் தம்படம் எடுத்துக்கொள்கின்றனர். அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
“ஒலிம்பிக் போட்டிகளின் நினைவுச்சின்னங்களுடன் நீங்கள் காட்சியளித்தால் உங்களுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்த திருவாட்டி விவியேன், “இதன் மூலம் உலகத்தை நான் சந்திக்கிறேன்,” என்றார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக விவியேன், பகல் நேரத்தில் அரிசி மணிக் கழுத்தணிகளை விற்கிறார். இரவு வேளையில் மளிகைப் பொருள்களைப் பொட்டலமிடும் வேலை செய்கிறார். இந்த வேலைகள் மூலம் கிடைக்கும் ஊதியத்தை அவர் ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்வதில் செலவிடுகிறார்.
லாஸ் ஏஞ்சலிசை அடுத்து, அட்லாண்டா, சிட்னி, ஏதன்ஸ், லண்டன், ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுள்ள விவியேன், பாரிஸ் விளையாட்டுகளையும் விட்டுவைக்கவில்லை.
சீன் நதிக்கு எதிரே நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவின் சிறப்பு நுழைவுச் சீட்டை விவியேன் $1,600 கொடுத்து வாங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“மழை பெய்ய ஆரம்பித்தது, பரவாயில்லை. மழையை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால், நான் எதையும் பார்க்கவில்லை. அங்கு பெரிய தொலைக்காட்சித் திரை மட்டுமே இருந்தது. அதனால் நான் ஒரு தொலைக்காட்சியைப் பார்க்க $1,600ஐக் கொடுத்ததை நினைக்கும்போது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது,” என்றார் விவியேன்.
நுழைவுச்சீட்டுக்கான குலுக்கலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, அவர் தனது தாய் மற்றும் சகோதரியின் பெயர்களைப் பயன்படுத்தினார். இப்போது அவர் பல நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை வைத்திருக்கிறார்.
“ நான் வீடு திரும்பியதும் ஒரு பெரிய கடன் பற்று அட்டை கட்டணப் பட்டியல் காத்திருக்கிறது,” என்று கூறிய அவர், “இருப்பினும் நான் செலுத்திய பணத்துக்கு பயன் பெற்றதாகக் கருதுகிறேன்,” என்றார்.
“போட்டியாளர்கள், சுற்றுப்பயணிகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவை புடைசூழ, ஒலிம்பிக் விளையாட்டுகளின் உணர்வை அனுபவிப்பதே ஒரு தனிச் சுகம்தான்,” என்கிறார் ஒலிம்பிக் மகா ரசிகர் விவியேன் ராபின்சன்.