சிட்னி: டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் ஐந்தாவது ஓவரையும் வீசுவதைப் பார்க்க விரும்புவதாக முன்னாள் நடுவர் சைமன் டாஃபெல் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது டி20 போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சம் நான்கு ஓவர்களைத்தான் வீச முடியும். இது மாறவேண்டும் என்பது டாஃபெல்லின் ஆசை.
இந்த விதிமுறையைத் தளர்த்தினால் அது டி20 கிரிக்கெட் விளையாட்டு உத்திகளுக்குப் புதிய பரிமாணத்தைத் தரும் என்பது இவரின் நம்பிக்கை. டாவ்ஃபெல், நவீன காலத்தில் ஆகச் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் என்று இந்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
“டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு பந்துவீச்சாளர் ஐந்தாவது ஓவரையும் வீசுவதைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். ஒரு பந்தபடிப்பாளர் ஒட்டுமொத்த ஆட்டத்திலும் விளையாடி சதமடிக்கும் வாய்ப்பைப் பெறும்போது பந்துவீச்சாளர்களை மட்டும் நான்கு ஓவர்களுக்கு மட்டும் விளையாடக் கட்டுப்படுத்தப்படுகின்றனர்,” என்றார் 54 வயது டாஃபெல். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் பந்தடிப்பாளர்கள், பந்துவீச்சாளர்களுக்கு முடிந்தவரை சமமான சூழல் இருக்கவேண்டும் என்றார் அவர்.
டாஃபெல், 2004லிருந்து 2008ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலம்வரை ஆண்டின் ஆகச் சிறந்த நடுவர்களுக்கு வழங்கப்படும் ஐசிசி விருதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளும் வென்றவர்.

