மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டி மீது சுமத்தப்பட்ட 115 குற்றச்சாட்டுகளின் தொடர்பில் முடிவு இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும் என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நிதி விதிமுறைகளை சிட்டி மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் தொடர்பில் சிட்டி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நீதிமன்ற விசாரணை நடந்தது.
குற்றச்சாட்டுகளை சிட்டி வலுவாக மறுத்து வருகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் விசாரணை நடத்திய சுயேச்சை குழு, சிட்டிக்கு எவ்வித இடையூறுமின்றி தண்டனைகளை விதிக்கலாம். அந்த அதிகாரம் விசாரணை நடத்திய குழுவுக்கு உள்ளது என்று பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் சிட்டி அதிகம் செலவு செய்து புதிய விளையாட்டாளர்களை வாங்கியது, ஒருவேளை தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் அதற்கு சரிக்கட்டுவதற்காக அல்ல என்றும் கார்டியோலா கூறியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் புதிய விளையாட்டாளர்களை வாங்க சிட்டிக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஓமார் மார்முஷ், நிக்கோ கொன்ஸாலஸ், அப்துகோடிர் குசானோவ், விட்டோர் ரைஸ், ஜூமா பா ஆகிய விளையாட்டாளர்களைக் கடந்த ஜனவரி மாதம் வாங்கியது சிட்டி. அவர்களை வாங்க அக்குழு 224 மில்லியன் வெள்ளிக்கும் மேல் செலவழித்தது.