மெல்பர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இப்போதைய பயிற்றுநர் ஆகிப் ஜாவித் ஒரு கோமாளி என்று அவ்வணியின் முன்னாள் பயிற்றுநரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளருமான ஜேசன் கில்லஸ்பி சாடியுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகைப் போட்டிகளிலும் பயிற்றுநராக வேண்டும் என்பதற்காகத் தம்மையும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டனையும் ஜாவித் குறைத்து மதிப்பிட்டதாக கில்லஸ்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்றுநராக கில்லஸ்பியும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான பயிற்றுநராக கிர்ஸ்டனும் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டனர்.
கடந்த ஈராண்டுகளில் 16 பயிற்றுநர்களையும் 26 தேர்வுக்குழு உறுப்பினர்களையும் பாகிஸ்தான் மாற்றியுள்ளதாக கில்லஸ்பி குறிப்பிட்டார்.
இப்படியொரு சூழலில் எந்த ஓர் அணியும் சிரமப்படவே செய்யும் என்றும் அவர் சொன்னார்.
“நல்ல வேடிக்கை. தான் பயிற்றுநராக வேண்டும் என்பதற்காக ஜாவித் என்னையும் கிர்ஸ்டனையும் குறைத்து மதிப்பிட்டு, திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டார். அவர் ஒரு கோமாளி,” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் கில்லஸ்பி பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான பயிற்றுநராகப் பதவியேற்ற ஆறு மாதங்களிலேயே அவ்வணியைவிட்டு விலகினார் இந்திய அணியின் முன்னாள் பயிற்றுநருமான கிர்ஸ்டன்.
அவரது பயிற்சியின்கீழ்தான் இந்திய அணி 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2024 ஏப்ரலில் பாகிஸ்தான் அணியுடன் இணைந்த கில்லஸ்பி, அவ்வணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, டிசம்பரில் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் இடைக்காலப் பயிற்றுநராக ஜாவித் நியமிக்கப்பட்டார்.