தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் விலகக்கூடும்

2 mins read
db0f22a6-b3a2-4cd3-900b-ebcf12081531
கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இருதரப்புப் போட்டிகள் நடக்காவிடினும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் அதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிலைப்பாட்டை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிபி) தெரிவித்துவிட்டது.

இதனையடுத்து, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தவும் மற்ற போட்டிகளைப் பாகிஸ்தானில் நடத்தவும் ஐசிசி திட்டமிடலாம்.

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிசிபி தலைவர் மோசின் நக்வி கைவிரித்துவிட்டதாகப் பாகிஸ்தானின் ‘டான்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தகைய சூழலில், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) போன்ற வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம். அத்தகைய நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்தே பாகிஸ்தான் விலகக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பிசிபி நாடியுள்ளது.

“அப்படியொரு நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க வேண்டாம் என்று அந்நாட்டு அரசு, தனது வாரியத்தைக் கேட்டுக்கொள்ளக்கூடும்,” என்று ‘டான்’ செய்தி தெரிவிக்கிறது.

திரு மோசின் நக்வியே பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்புப் போட்டிகளில் விளையாடியதில்லை. அதே வேளையில், ஐசிசி நடத்தும் போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

முன்னதாக, சென்ற ஆண்டு நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியின்போதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவில்லை. மாறாக, இந்திய அணி மோதிய ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடந்தன.

குறிப்புச் சொற்கள்