தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட்: பங்ளாதேஷிடம் தோற்றதால் பாதாளத்தை நோக்கி பாகிஸ்தான்

1 mins read
தரவரிசையில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக மோசமான நிலை
50bb7895-d67a-4f86-9a6c-8b134cc91932
பாகிஸ்தான் அணியை அந்த சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியினர். - படம்: ஏஎஃப்பி

ராவல்பிண்டி: சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்ளாதேஷ் அணியிடம் 2-0 எனப் படுதோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி தரவரிசையில் பெருஞ்சரிவைச் சந்தித்துள்ளது.

அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. முந்திய பட்டியலில் அவ்வணி ஆறாமிடத்தில் இருந்தது.

அவ்வணி 76 தரப்புள்ளிகளுடன் உள்ளது. 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அவ்வணியின் ஆகக் குறைவான தரப்புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - பங்ளாதேஷ் அணிகள் மோதிய இரு டெஸ்ட் போட்டிகளும் ராவல்பிண்டியில் நடந்தது. முதல் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்திலும் பங்ளாதேஷ் அணி வெற்றிபெற்றது.

இதன்மூலம் அவ்வணிக்கு 13 புள்ளிகள் கிடைத்தன. ஆயினும், அவ்வணி 66 புள்ளிகளுடன் ஒன்பதாம் நிலையிலேயே நீடிக்கிறது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 124 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் இங்கிலாந்து அணி 108 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

இதனிடையே, 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பங்ளாதேஷ் நாலாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முறையே முதல் மூன்று நிலைகளில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்