செல்சிக்கு வெற்றிமீது வெற்றி சேர்க்கும் பாமர்

2 mins read
c84b1843-1bf5-4774-bf96-3b2cf0ed4f13
ஸ்பர்சுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சியின் முதல் பெனால்டி வாய்ப்பை கோலாக்கும் கோல் பாமர். - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான செல்சி, அபாரமான முறையில் மீண்டு வந்து டாட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 4-3 எனும் கோல் கணக்கில் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 08) நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் தொடங்கி 11 நிமிடங்களுக்குள் ஸ்பர்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது. ஆறே நிமிடங்கள் கழித்து செல்சிக்கு ஒரு கோலைப் போட்டார் ஜேடன் சாஞ்சோ.

பிற்பாதியாட்டத்தில் செல்சியின் கோல் பாமர் (Cole Palmer) இரண்டு பெனால்டி வாய்ப்புகளைக் கோலாக்கினார். 61வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பாமர் கோலாக்கிய பிறகு 73வது நிமிடத்தில் என்ஸோ ஃபெர்னாண்டஸ் செல்சியை முன்னுக்கு அனுப்பினார். ஃபெர்னாண்டசின் கோலிலும் பாமரின் பங்கு இருந்தது.

பின்னர் 84வது நிமிடத்தில் பாமர் தனக்குக் கிடைத்த இரண்டாவது பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

கூடுதல் நேரத்தின் ஆறாவது நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணித்தலைவர் சோன் ஹியோங் மின் ஆறுதல் கோலைப் போட்டார். டோமினிக் சொலாங்கி, டே‌‌ஷான் குலுசெவ்ஸ்கி இருவரும் அக்குழுவின் முதல் இரு கோல்களைப் போட்டனர்.

லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழுவான ஆர்சனல், ஃபுல்ஹமை வெல்லத் தவறியது. அந்த ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனத் தோற்றுக்கொண்டிருந்த லெஸ்டர் சிட்டி, கடைசி சில நிமிடங்களில் மீண்டெழுந்து 2-2 என சமநிலை கண்டது. மற்றோர் ஆட்டத்தில் போர்ன்மத், இப்சுவிச் டவுனை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

குறிப்புச் சொற்கள்