தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாண்டியா உள்ளே, ரோகித் வெளியே

2 mins read
751c41a5-1816-4870-b306-5fb64086bf7b
இந்தியாவில் அக்டோபரில் நடந்த உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஹார்திக் பாண்டியா. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: 2024 இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக ஹார்திக் பாண்டியா செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராகச் செயல்பட்டு வந்தார் ரோகித் சர்மா. அவரது தலைமையில் அந்த அணி ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்றது.

இந்நிலையில், அணித்தலைவர் பதவியிலிருந்து ரோகித் நீக்கப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பாண்டியா, கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். அங்கே அவருக்கு அணித்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே அவ்வணிக்குக் கிண்ணத்தை வென்று தந்தார் பாண்டியா, 30. இவ்வாண்டு தொடரிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை பாண்டியா அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், கடந்த நவம்பரில் டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பிய பாண்டியாவுக்கு தற்போது அணித்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணித்தலைவர் மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே கூறுகையில், “இது பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதி. எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கொள்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக ரோகித் சர்மா 2013லிருந்து சிறப்பாகச் செயல்பட்டார். அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்