பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு வெற்றியை ஈட்டினால் போதும், இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் பதக்கம் கைசேர்ந்துவிடும்.
கிரேட் பிரிட்டனுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி 4-2 என பெனால்டி வாய்ப்புகளில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்து, தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இது நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அவர் அடித்த ஏழாவது கோல்.
ஆயினும், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே பதில் கோலடித்து, ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தது கிரேட் பிரிட்டன்.
இந்திய வீரர் அமித் ரோகிதாசின் மட்டை எதிரணி வீரரின் முகத்தில் பட்டதால் அவர் சிவப்பு அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார். இதனால் இரண்டாம் காற்பகுதியில் இந்திய அணி பத்துப் பேருடன் ஆட நேரிட்டது.
அதன்பின் கிரேட் பிரிட்டனுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தும் இந்திய அணியின் அருமையான தற்காப்பாலும் கோல்காப்பாளர் பி.ஆர். ஸ்ரீஜேஷின் அபாரமான செயல்பாட்டாலும் அவ்வணியால் கோலடிக்க முடியவில்லை.
இறுதியில், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே முடிந்ததால், வெற்றியாளரை முடிவுசெய்ய பெனால்டி ஷூட்அவுட் முறை கையாளப்பட்டது.
அதில் இந்திய அணி 4-2 என முன்னிலை பெற்று, வெற்றியைச் சுவைத்தது. இந்திய அணித் தரப்பில் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், குமார் உபாத்யாய், ராஜ்குமார் ஆகியோர் பந்தை வலைக்குள் அடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கிரேட் பிரிட்டனின் கானர் வில்லியம்சன் பந்தை வலைக்கு வெளியில் அடிக்க, ஃபிலிப் ரோப்பரின் கோல் முயற்சியை முறியடித்தார் ஸ்ரீஜேஷ்.
அடுத்ததாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ள ஜெர்மனி - அர்ஜென்டினா இடையிலான காலிறுதியில் வெற்றிபெறும் அணியுடன் இந்திய அணி அரையிறுதியில் மோதும்.