பாரிஸ்: 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது.
இப்போட்டியின் துவக்க விழா ஜூலை 26ஆம் தேதியன்று கோலாகலமாக அரங்கேறியது.
பாரிஸ் நகரம் ஒளிவெள்ளத்தில் மூழ்கியது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒலிம்பிக் துவக்க விழாவுடன் இந்தத் திருவிழா சற்று மாறுபட்டதாக இருந்தது.
விளையாட்டரங்கில் நடைபெறுவதற்குப் பதிலாக, துவக்க விழா ‘சென்’ நதியோரம் களைகட்டியது.
85 படகுகளில், போட்டியில் பங்கேற்கும் 205 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 6,800 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டுக் கொடிகளை அசைத்தப்படி ‘சென்’ நதி வழியாகப் பாரிசின் புகழ்பெற்ற இடங்களைக் கடந்து சென்றனர்.
அவர்களில் சிங்கப்பூர் வீரர்களும் வீராங்கனைகளும் அடங்குவர்.
துவக்க விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது மனைவி திருவாட்டி ஜேன் இட்டோகியும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் படகில் செல்வதை அவர்கள் டுரோகடேரோ மாளிகையில் இருந்தவாறு திரையில் பார்த்து சிங்கப்பூர்க் கொடியைப் பெருமையுடன் அசைத்து மகிழ்ந்தனர்.
பிரான்சின் ஜூடோ தற்காப்புக் கலை சகாப்தம் டெடி ரினரும் ஓட்டப் பந்தய வீராங்கனை மரி ஜோசே பெரெக்கும் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றிவைத்து ஒலிம்பிக் போட்டியைத் துவக்கி வைத்தனர்.
ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றிவைக்க பயன்படுத்தப்பட்ட கலன், வெப்பக்காற்று பலூனைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் தீபச்சுடர் ஏற்றிவைக்கப்படுவதற்கு முன்பு அதைப் பல விளையாட்டு நட்சத்திரங்கள் ஏந்தினர்.
அவர்களின் பிரபல பிரெஞ்சுக் காற்பந்து வீரர் ஸினிடின் ஸிடானும் ஒருவர்.
பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரபல பாடகி செலின் டியோன் பாடி அங்கு திரண்டிருந்த அனைவரையும் மகிழ்வித்தார்.
1996ஆம் ஆண்டு அட்லான்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் அவர் பாடினார்.
அதன் பிறகு ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் அவர் பாடியிருப்பது இதுவே இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று நிறைவு பெறும்.