பெங்களூரின் தொடர் வெற்றிக்குப் பயிற்றுவிப்பாளரைப் பாராட்டிய பட்டிதார்

பெங்களூரின் தொடர் வெற்றிக்குப் பயிற்றுவிப்பாளரைப் பாராட்டிய பட்டிதார்

2 mins read
f4904775-de59-4e2a-b6dd-1a2b341e0ce5
ஐபிஎல் 2026 கிண்ணத்தை உயர்த்திப் பிடித்து வெற்றிக் களிப்பில் கொண்டாடும் பெங்களூரு அணி. - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் விருதைத் தற்காக்க உதவியதற்காகத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஆண்டி ஃபிளவரை அணித் தலைவர் ரஜத் பட்டிதார் பாராட்டியிருக்கிறார்.

அணியின் கலாசாரத்தை மாற்ற ஃபிளவர் எடுத்த முயற்சிகளை அவர் மெச்சினார்.

அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை எடுத்தது. தொடக்கம் முதலே அந்த அணியின் ஆட்டக்காரர்கள் களத்துக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். வா‌ஷிங்டன் சுந்தர் மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி, இரண்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. விராத் கோஹ்லி, 42 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை நின்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அவரே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஐபிஎல்லின் முதல் 17 பருவங்களில் மூன்று முறை இறுதிப்போட்டிவரை வந்து வெற்றிபெறத் தவறிய பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 2024ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் ஸிம்பாப்வேயின் ஃபிளவர். அதன் பிறகு இரண்டு முறை கிண்ணத்தைத் தொடர்ச்சியாக வென்றுள்ளது அந்த அணி.

“ஐபிஎல்லில் ஐந்து பருவங்கள் விளையாடியிருக்கிறேன். மிகச் சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் அவரும் ஒருவர். களத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாது அனைத்து விளையாட்டாளர்களையும் அவர் கையாளும் விதம் அபாரம்,” என்று பட்டிதார் கூறினார்.

“அணியின் கலாசாரம் மாறிவிட்டது. 2021க்கு முன்பு எப்படி இருந்தது என்று தெரியவில்லை. நான் வந்த பிறகு, விளையாட்டாளர்களின் மனப்போக்கிலும் ஏராளமான மாற்றங்கள். எல்லா விளையாட்டாளர்களையும் பயிற்றுவிப்பாளர்கள் ஒரே மாதிரி நடத்துகிறார்கள்,” என்றார் அவர்.

திங்கட்கிழமை அதிகாலை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பட்டிதார், தொடர்ந்து மூன்று முறை கிண்ணம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது பெங்களூரு அணி என்றார்.

“இன்று எனது பிறந்த நாள். இதைவிடச் சிறந்த பரிசு கிடைக்க முடியாது,” என்று ஆனந்தத்துடன் சொன்னார் 32 வயதை எட்டிய பட்டிதார்.

குறிப்புச் சொற்கள்