தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைவர் பதவியில் தொடருங்கள்: டோனிக்கு விமானி வேண்டுகோள்

1 mins read
36bf673f-a19b-4100-a606-3afc2d191d16
படம்: சென்னை சூப்பர் கிங்ஸ் / டுவிட்டர் -

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, உலகளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டாளர்களில் ஒருவர்.

அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டபோதும் ஐபிஎல் டி20 போட்டிகளில் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகத் தொடர்கிறார்.

அவருக்கு 41 வயதாகிவிட்டதால் நடப்பு ஐபிஎல் தொடரே விளையாட்டாளராக அவர் பங்கேற்கும் இறுதித் தொடராக இருக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.

ஆனால், தம்மால் விளையாட முடியும்வரை டோனி சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அவ்வணி ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில், விமானத்தில் பறந்தபோது அப்படி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார் விமானி ஒருவர்.

அண்மையில் சென்னை அணி வீரர்கள் விமானத்தில் பறந்தபோது, தான் இயக்கும் விமானத்தில் அவர்கள் பயணம் செய்வது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அதன் விமானி ஒலிபெருக்கியில் பேசினார்.

டுவைன் பிராவோ, ஷிவம் துபே உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்ட அவர், டோனியிடம் சிறப்பு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

"நான் உங்களின் மிகப் பெரிய ரசிகன். தயவுசெய்து சென்னை அணியின் தலைவராக நீங்கள் தொடர வேண்டும்," என்று அந்த விமானி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, மும்பை வான்கடே அரங்கில் சனிக்கிழமை நடந்த போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் சென்னை அணியின் அஜிங்கிய ரகானே 19 பந்துகளில் அரைசதமடித்து, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்