இந்தியாவுடன் விளையாடுங்கள்: பாகிஸ்தானுக்கு இலங்கை கோரிக்கை

இந்தியாவுடன் விளையாடுங்கள்: பாகிஸ்தானுக்கு இலங்கை கோரிக்கை

படம்: ஏஎஃப்பி

06 Feb 2026 - 6:27 pm

2 mins read

கொழும்பு: டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) முதல் தொடங்குகிறது. போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் ஏற்று நடத்துகின்றன.

பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் பங்ளாதே‌ஷ் விளையாட மறுப்பு தெரிவித்தது. தன்னுடைய ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திடம் பங்ளாதே‌ஷ் கோரிக்கை விடுத்தது.

கோரிக்கையை மன்றம் நிராகரித்ததால் பங்ளாதே‌ஷ் போட்டியிலிருந்து விலகியது.

இந்நிலையில், பங்ளாதே‌ஷுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

இலங்கையில் பிப்ரவரி 15ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த அந்த ஆட்டம் இலங்கைக்குப் பொருளியல் சார்ந்தும் மிக முக்கியமான ஒன்று.

அந்த ஆட்டத்தைக் காணப் பல்லாயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இலங்கைக்குச் செல்வார்கள். ஹோட்டல், உணவு, போக்குவரத்து எனப் பலதுறைகளில் இலங்கைக்கு வருவாய் கிடைக்கும்.

ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆட்டத்தைப் புறக்கணிப்பதால் அது இலங்கைக்கு நட்டத்தை ஏற்படுத்தும். இதனால் இலங்கை கிரிக்கெட் கழகம் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

“பாகிஸ்தானின் முடிவு இலங்கைக்கு நிதி, சுற்றுலா சார்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னும் மீளவில்லை,” என்று அது குறிப்பிட்டது.

“பாதுகாப்பு கருதி மற்ற நாடுகள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தபோது இலங்கை துணையாக இருந்து அங்கு விளையாடியது அதனால் எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்,” என்று இலங்கை கிரிக்கெட் கழகம் தெரிவித்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் காரணமாக இருநாட்டுத் தொடர்களில் விளையாடாது. உலகக் கிண்ணம், ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட போட்டிகளில் மட்டுமே அவை மோதும். அதனால் இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டம் எப்போதுமே அனல் பறக்கும்.

குறிப்புச் சொற்கள்
கிரிக்கெட்டி20உலகக் கிண்ணம்