தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மாதங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு

1 mins read
e6ccf578-3240-4fc2-bfbf-a0e5708290f2
தென்னாப்பிரிக்க வீரரை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர். - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.

இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் நான்கில் தோற்றுப்போனதால் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட முதல் சுற்றுடன் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாகப் பாகிஸ்தான் வீரர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளார் அவ்வணியின் முன்னாள் தலைவர் ரஷீத் லத்தீஃப்.

“அணித்தலைவர் பாபர் ஆசம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாக்கா அஷ்ரஃபுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார். அதற்கு அஷ்ரஃப் பதிலளிக்கவில்லை. அதுபோல், வாரியத்தின் தலைமைச் செயலதிகாரி சல்மான் நசீருக்கும் அவர் குறுஞ்செய்தி அனுப்பினார். அவரும் அதற்கு பதிலளிக்கவில்லை. அணித்தலைவர்க்குப் பதில் கூறாததற்கு என்ன காரணம்?

“பிறகு நீங்கள் ஓர் செய்தி அறிக்கை வெளியிடுகிறீர்கள். வீரர்களின் ஒப்பந்தங்கள் மறுசீரமைக்கப்படும் என்கிறீர்கள். ஐந்து மாதங்களாக வீரர்களுக்குச் சம்பளம் தரவில்லை. பிறகு எப்படி நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்?” என்று ‘பிடிவி ஸ்போர்ட்ஸ்’ ஒளிவழி நிகழ்ச்சியின்போது லத்தீஃப் காட்டமாகச் சொன்னார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போதிய ஆதரவு வழங்காததால் அணி வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், ரஷீத் இப்படியோர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

குறிப்புச் சொற்கள்