‘பாண்டியாவைவிட சூர்யகுமார்மீது இந்திய வீரர்கள் அதிக நம்பிக்கை’

2 mins read
cd39b343-e952-4ec4-bf14-51380ac94f66
டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் துணைத் தலைவராக ஹார்திக் பாண்டியா (இடது) செயல்பட்டபோதும், அடுத்த டி20 இந்திய அணித்தலைவராக சூர்யகுமார் யாதவ் (நடுவில்) நியமிக்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாக அமைந்துள்ளது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: ரோகித் சர்மா அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்து, இந்திய டி20 அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ், 33.

டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணியின் துணைத் தலைவராகச் செயல்பட்ட ஹார்திக் பாண்டியாவே அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இம்மாதம் இலங்கை சென்று மூன்று டி20 போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இந்திய அணி விவரம் வியாழக்கிழமை (ஜூலை 18) அறிவிக்கப்பட்டது.

அதில், டி20 அணிக்கு சூர்யகுமாரும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவும் தலைமையேற்பர் என அறிவிக்கப்பட்டது. இருவகைப் போட்டிகளிலும் ஷுப்மன் கில் இந்திய அணியின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இம்முடிவு பாண்டியாவிற்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம்.

புதிய டி20 அணித்தலைவர் தொடர்பில் இந்திய வீரர்களின் கருத்து கேட்ட பிசிசிஐ, பாண்டியாவைவிட சூர்யகுமார்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதையும் அவரது தலைமைத்துவத்தின்கீழ் விளையாடுவதை சௌகரியமாக உணர்வதையும் கண்டறிந்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

அத்துடன், பாண்டியா அடிக்கடி காயமடைந்துவிடுவதால் அவரது உடற்தகுதியையும் பிசிசிஐ கவனத்தில் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், அடிக்கடி காயத்தால் அவதிப்படாத ஒருவரே அணித்தலைவராக இருக்க வேண்டும் என்று இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்றுநரான கௌதம் காம்பீரும் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. சூர்யகுமாரின் கிரிக்கெட் குறித்த அறிவும் அவரைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் சூர்யகுமார். தம்முடைய 30 வயதில்தான் அவர் அணிக்குள் நுழைந்தார் என்றாலும், திடலின் எல்லாத் திசைகளிலும் பந்தை அடிக்கவல்ல ஆற்றலால் வெகுவிரைவிலேயே அணியின் நம்பத்தகுந்த ஆட்டக்காரராக அவர் உருவெடுத்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தியிருந்தார் சூர்யகுமார். அத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

பாண்டியா விவாகரத்து

இதனிடையே, செர்பியா நாட்டைச் சேர்ந்த தம்முடைய மனைவியும் விளம்பரப்பட அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிச்சைப் பிரிவதாக அறிவித்துள்ளார் பாண்டியா. நாலாண்டுகளுக்குமுன் பாண்டியா - நடாஷா திருமணம் நடந்த நிலையில், அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரியப்போவதாகச் செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன.

சொந்த வாழ்வில் புயல் வீசிய நிலையில், அணித்தலைவர் பதவியும் பாண்டியாவின் கையைவிட்டு நழுவியது.

குறிப்புச் சொற்கள்