லிவர்பூலுக்கு வேதனை தந்து பிலிமத் சாதனை

1 mins read
15063c89-44a5-4a0f-a5f5-c1c2af3132fc
லிவர்பூலை வென்ற பிறகு கொண்டாடும் பிலிமத் வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பிலிமத்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து லிவர்பூலை வெளியேற்றியிருக்கிறது பிலிமத் ஆர்கைல்.

இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூலை, பிரிமியர் லீக்குக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாம்பியன்‌ஷிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கும் பிலிமத் வெல்லும் என்பது பெரும்பாலோர் எதிர்பார்த்திராத ஒன்றாகும். இந்த நான்காம் சுற்று ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிலிமத்.

பிற்பாதியாட்டம் தொடங்கி எட்டாவது நிமிடத்தில் பிலிமத்தின் ரயன் ஹார்டி, பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.

பிலிமத்தின் வெற்றி கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ரயன் ஹார்டி (நடுவில்).
பிலிமத்தின் வெற்றி கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் ரயன் ஹார்டி (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

இந்தப் பருவம் தொடங்குவதற்கு முன்பு லிவர்பூல் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆர்ன ஸ்லொட். மிகச் சிறப்பாகச் செய்து வந்துள்ள அவரின்கீழ், லிவர்பூல் பிரிமியர் லீக் விருது, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம் (League Cup) என அனைத்தையும் வெல்லக்கூடும் என்ற உணர்வு இருந்தது. இப்போது அவற்றில் ஒரு போட்டியிலிருந்து எதிர்பாரா வகையில் லிவர்பூல் வெளியேறிவிட்டது.

ஆட்டத்தில் ஸ்லொட், பல நட்சத்திர விளையாட்டாளர்களைக் களமிறக்கவில்லை. இருந்தாலும் பிலிமத்துக்கு எதிராக லிவர்பூல் மண்ணைக் கவ்வும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

பிலிமத்தின் இந்த வெற்றி, எஃப்ஏ கிண்ண வரலாற்றில் இடம்பிடித்துள்ள மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்