புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து முறையிடுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதன் தொடர்பில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.சி. உஷாவுடன் பேசிய திரு மோடி, வினேஷ் போகத் வழக்கில் உதவுவதற்கான தெரிவுகளை ஆராயும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையான வினேஷ் போகத்தை ‘வெற்றியாளர்களில் வெற்றியாளர்’ எனக் குறிப்பிட்டு, அவர் வலிமையாக மீண்டெழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வோர் இந்தியருக்கும் ஊக்கசக்தி. இன்றைய பின்னடைவு வேதனை தருகிறது. நான் அனுபவிக்கும் விரக்தியைச் சொற்களால் வெளிப்படுத்த முடிய வேண்டும் என விரும்புகிறேன். அதே நேரத்தில், மீண்டெழுவதில் நீங்கள் முன்மாதிரி என்பதை அறிவேன். முன்னுள்ள சவால்களை எதிர்கொள்வதுதான் எப்போதுமே உங்கள் இயல்பு. வலிமையாக மீண்டு வாருங்கள்!” என்று திரு மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டர்பிரான்டுக்கு எதிராக 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) மோதவிருந்தார் வினேஷ் போகத். ஆனால், அவரது உடல் எடை ஏறக்குறைய 100 கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி, போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரைத் தகுதிநீக்கம் செய்துவிட்டனர்.