தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் பாராட்டு

3 mins read
c8628eec-851f-4566-bba7-9e79724ead90
டி20 உலகக் கிண்ணம் கைசேர்ந்த உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் அணியினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியுடனான இறுதியாட்டத்தில் முதலில் பந்தடித்த இந்திய அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைக் குவித்தது. தென்னாப்பிரிக்க அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, 169 ஓட்டங்களை மட்டும் எடுத்து, ஏழு ஓட்டங்களில் தோற்றுப்போனது.

இந்நிலையில் அணித்தலைவர் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, தலைமைப் பயிற்றுநர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய அணியினரின் அசத்தலான ஆட்டத்திறனைப் பாராட்டினார்.

குறிப்பாக ரோகித், கோஹ்லி இருவருக்கும் அவர் புகழாரம் சூட்டினார். டி20 உலகக் கிண்ணம் கைசேர்ந்த மகிழ்ச்சியுடன் ரோகித்தும் கோஹ்லியும் அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

தலைசிறந்த தலைமைத்துவத்துக்காகவும் குறிப்பிடத்தக்க டி20 போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்ததற்காகவும் ரோகித்தை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.

“நீங்கள் மிகச் சிறந்த நபராக உள்ளீர். உங்கள் மனப்போக்கு, பந்தடிப்பு, அணித்தலைவர் பொறுப்பு இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. உங்கள் டி20 வாழ்க்கை அன்புடன் நினைவுகூரப்படும்,” என்று ரோகித்திடம் அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்க அணியுடனான இறுதியாட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கோஹ்லியையும் அவர் மெச்சினார்.

“கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலும் நீங்கள் மிளிர்ந்துள்ளீர். டி20 போட்டியிலிருந்து நீங்கள் விடைபெற்றாலும், புதிய தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் தருவீர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வுபெற்ற கோஹ்லியிடம் பிரதமர் மோடி கூறினார்.

இறுதியாட்டத்தின் கடைசி ஓவரில் பதற்றத்தைச் சமாளித்து பந்துவீசிய ஹார்திக் பாண்டியாவையும், அந்த ஓவரின் முதல் பந்தில் எல்லைக்கோட்டருகே அற்புதமாக ‘கேட்ச்’ பிடித்து, அபாயகரமான ஆட்டக்காரர் டேவிட் மில்லரை வெளியேற்றிய சூர்யகுமார் யாதவ்வையும் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

வேகப்பந்துவீச்சால் பல விக்கெட்டுகளைச் சாய்த்து முக்கியப் பங்களித்த ஜஸ்பிரீத் பும்ராவையும் அவர் பாராட்டினார்.

இந்திய அணிக்கு முதன்மைப் பங்களித்த தலைமைப் பயிற்றுநர் டிராவிட்டுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“அவரது அற்புதமான பயிற்றுவிப்புப் பயணம், இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உத்திபூர்வக் கண்ணோட்டங்கள், சரியான திறன்களைப் பேணி வளர்த்தல் ஆகியவை அணியை உருமாற்றியுள்ளன.

“அவரது பங்களிப்புகளுக்காகவும் தலைமுறைகளுக்கு ஊக்கமளித்ததற்காகவும் இந்தியா அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது,” என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டார்.

இந்திய அணியை நினைத்து நாடே பெருமைப்படுவதாகக் குறிப்பிட்ட இந்திய அதிபர் திரௌபதி முர்மு, “ஒருபோதும் விட்டுக்கொடுக்காத உணர்வுடன் விளையாடிய இந்திய அணி, கடினமான சூழ்நிலைகளைக் கடந்து போட்டித் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது,” எனப் புகழாரம் சூட்டினார்.

2007க்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இந்திய அணிக்குப் பாராட்டு தெரிவித்த இதர அரசியல் தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈடு இணையற்ற திறனுடன் சவாலான சூழலில் அணி வியக்கத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறினார்.

இந்திய அணிக்குப் பெரும்பரிசு

டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இந்திய அணிக்கு அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.20.42 கோடி) பரிசுத்தொகை வழங்கியுள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இரண்டாம் நிலையில் வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலர் (ரூ.10.67 கோடி) பரிசுப்பணமாகக் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்