வார்சா: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகல் 3-1 எனும் கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.
இதன்மூலம் இப்போட்டியில் இதுவரை களமிறங்கியுள்ள மூன்று ஆட்டங்களிலும் போர்ச்சுகல் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் பெர்னாடோ சில்வா கோல் போட்டு போர்ச்சுகலை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். 11 நிமிடங்கள் கழித்து, போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது குழுவின் இரண்டாவது கோலைப் போட்டார்.
இடைவேளையின்போது 2-0 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் போலந்தின் பியோட்டர் சியேலின்ஸ்கின் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
ஆனால், அது போலந்தின் ஆறுதல் கோலாகவே அமைந்தது.
ஆட்டம் முடியும் வேளையில் போலந்தின் தற்காப்பு ஆட்டக்காரர் யான் பெட்னாரெக் சொந்த கோல் போட்டார்.
மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க்கை 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்தது.
தொடர்புடைய செய்திகள்
காயம் காரணமாக ஸ்பெயினின் நட்சத்திர வீரர்கள் பலர் களமிறங்கவில்லை.
இருப்பினும், அக்குழு வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றோர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 2-0 எனும் கோல் கணக்கில் செர்பியா எளிதாக வீழ்த்தியது. கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் சுவிட்சர்லாந்து தவறவிட்டது. இப்போட்டியில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் அது தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விட்டுக்கொடுக்காமல் போராடிய குரோவேஷியா 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.
ஆட்டத்தின் முதல் கோலை 32வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து போட்டு முன்னிலை வகித்தது.
மனந்தளராமல் விளையாடிய குரோவேஷியா அடுத்த நான்கு நிமிடங்களிலேயே கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் குரோவேஷியாவின் வெற்றி கோலை ஆண்ரேஜ் கிராமாரிச் போட்டார்.