பிரிமியர் லீக்: 75 விழுக்காடு ரசிகர்கள் ‘விஏஆர்’ தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு

பிரிமியர் லீக்: 75 விழுக்காடு ரசிகர்கள் ‘விஏஆர்’ தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு

2 mins read
கோல் கொண்டாட்ட உற்சாகத்தைத் தொழில்நுட்பம் கெடுப்பதாகப் புகார்; எஃப்எஸ்ஏ ஆய்வில் தகவல்
8b685eb9-1ff8-46d3-aa14-19a65e51e2d4
மார்ச் 5, 2026 அன்று லண்டனில் நடைபெற்ற டோட்டன்ஹாம் - கிரிஸ்டல் பேலஸ் இடையிலான போட்டியின் போது திரையில் காட்டப்பட்ட காணொளிப் பதிவு அறிவிப்பு. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலாந்துப் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ‘வீடியோ அசிஸ்டெண்ட் ரெஃப்ரி’ (விஏஆர்) எனப்படும் காணொளிப் பதிவு தொழில்நுட்பத்திற்கு 75 விழுக்காட்டிற்கும் அதிகமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகப் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காற்பந்து ரசிகர் சங்கம் (எஃப்எஸ்ஏ) நடத்தி அந்த இணையவழி ஆய்வில் ஏறக்குறைய 8,000 ரசிகர்கள் பங்கேற்றனர். இவ்வாண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 23 வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஆய்வின் முக்கிய அம்சங்கள்

ஆய்வில் பங்கேற்றவர்களில் 75.7 விழுக்காட்டினர் காற்பந்தில் காணொளிப் பதிவு தொழில்நுட்பம் தொடர்வதை ஆதரிக்கவில்லை.

ஏறக்குறைய 91.7 விழுக்காடு ரசிகர்கள், ஒரு கோல் அடிக்கப்பட்டவுடன் தன்னிச்சையாக வெளிப்படும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும் இந்தத் தொழில்நுட்பம் தடுத்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

காணொளிப் பதிவு முடிவிற்காகக் காத்திருப்பது ஆட்டத்தின் சுவாரசியத்தைக் குறைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எஃப்எஸ்ஏவின் பிரிமியர் லீக் கட்டமைப்பின் மேலாளர் தாமஸ் கான்கண்ணன் கூறுகையில், “2021ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய ஆய்வின் தொடர்ச்சியாகவே இந்த முடிவுகளும் அமைந்துள்ளன. அப்போதே ரசிகர்கள் காணொளிப் பதிவு வருகை குறித்துத் தயக்கங்களை வெளிப்படுத்தினர். இந்த முடிவுகள் குறித்து பிரிமியர் லீக் நிர்வாகத்திடமும் நடுவர் குழுவிடமும் பகிர்ந்துள்ளோம். இதுகுறித்து விரிவாக விவாதிக்கக் காத்திருக்கிறோம்,” என்றார்.

“தொழில்நுட்பம் துல்லியமான முடிவுகளை வழங்கினாலும், விளையாட்டின் நன்மைக்காகவும் ரசிகர்களின் திருப்திக்காகவும் இதில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும்,” என பிரிமியர் லீக் அணிகள் நிர்வாகம் கடந்த ஜூன் 2024ல் தெரிவித்திருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள், பிரிமியர் லீக் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்