காற்பந்து நடுவர் மன்றத்தால் பிரிமியர் லீக் நடுவர் டேவிட் கூட் பதவி நீக்கம்

2 mins read
2fd6a63a-48ac-4a7a-a2fa-425d6fde1818
பிரிமியர் லீக் காற்பந்து நடுவர் டேவிட் கூட் - படம்:ராய்ட்டர்ஸ்

பிரிமியர் லீக் நடுவர் டேவிட் கூட்டை திங்கட்கிழமை (டிசம்பர் 9) இங்கிலீஷ் பிரிமியர் லீக் எனப்படும் இங்கிலாந்தின் பிரபல காற்பந்து போட்டிகளின் நடுவர் அமைப்பான புரொஃபெஷனல் கேம் மேட்ச் அஃபீஷியல்ஸ் லிமிடெட் (PGMOL) பணிநீக்கம் செய்துள்ளது.

விசாரணையில் அவரது நடவடிக்கைகள் நடுவர் ஒப்பந்தத்தை கடுமையாக மீறியிருப்பது கண்டறியப்பட்டது.

சமூக ஊடகங்களில் கடந்த மாதம் பரவலாக காணொளி ஒன்று வெளிவந்தது. அதனில் முன்னாள் லிவர்பூல் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் யர்கன் குளோப்பை காற்பந்து நடுவர் டேவிட் கூட் முறைகேடாக நடத்தியது தெரியவந்தது. அதையடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஒப்பந்தத்தை மீறியதற்காக டேவிட் கூட் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நடுவர் அமைப்பு அறிவித்துள்ளது.

டேவுட் கூட் மீதுள்ள மேலும் சில குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டன.

ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் நடந்த யூரோ 2024 காற்பந்து போட்டியில் பணியாற்றிய டேவிட் கூட், போதைப் பொருளை நுகர்வது போன்ற காணொளியை தி சன் நாளிதழ் அச்சமயம் வெளியிட்டது. கடந்த நவம்பர் 27 அன்று, காற்பந்து ஆட்டத்துக்கு முதல்நாள் குறிப்பிட்ட விளையாட்டாளரை ஆட்டத்தின்போது குறிவைத்து நடவடிக்கை எடுக்க மற்றொருவருடன் திட்டமிட்டது போன்ற குற்றங்களும் விசாரணையில் அடங்கும். இவற்றை டேவிட் கூட் மறுத்துள்ளார்.

அதேவேளை, டேவிட் கூட்டின் நலனை உறுதி செய்து அவருக்கு ஆதரவு வழங்கும் கடமை தமக்குள்ளதாகவும் நடுவர் அமைப்பு அறிவித்துள்ளது. மேல் முறையீடு செய்யும் உரிமை டேவிட் கூட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்