லண்டன்: இங்கிலீஷ் பிரீமியர் லீக் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்ட 115 குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு இது பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.
இதனால், குழுவின் புள்ளிகள் குறைக்கப்படலாம். அபராதம் விதிக்கப்படலாம். அல்லது பிரீமியர் லீக் போட்டிகளிலிருந்துகூட அது வெளியேற்றப்படலாம்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மான்செஸ்டர் சிட்டி திட்டமிட்டுள்ளது.
“விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியக் கூறுகள் இன்னும் நிறைவடையவில்லை. இது கடுமையான ரகசியக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது,” என்று அது தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டிலிருந்து மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிலைப்பாடு மாறவில்லை.
“கடந்த 8 ஆண்டுகளாக உரிய நடைமுறைகளை மதித்து வருகிறோம். நிர்வாகம் நடுநிலையாகச் செயல்படும் என எதிர்பார்க்கிறோம்,” என்று குழு கூறியது.
பிரீமியர் லீக் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்தத் தீர்ப்பு மான்செஸ்டர் சிட்டியின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர் சைமன் லீஃப் கூறினார்.
இதற்கு முன்பு சிறிய அளவிலான நிதி விதிமீறல்களுக்காக எவர்டன், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் ஆகிய குழுக்களின் புள்ளிகள் குறைக்கப்பட்டன.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான மான்செஸ்டர் சிட்டி குழு, மத்திய கிழக்கின் வெற்றிகரமான முதலீடாகக் கருதப்படுகிறது.
தவறான நிதித் தகவல்களை வழங்கியது, உரிமையாளர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து அதிக வருவாயைப் பெற்றது ஆகியவை மான்செஸ்டர் சிட்டி மீதான முக்கியக் குற்றச்சாட்டுகளாகும்.
2008ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினர் வாங்கிய பிறகு எட்டு முறை பிரீமியர் லீக் கிண்ணத்தை மான்செஸ்டர் சிட்டி வென்றுள்ளது.
