புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சேத்தேஸ்வர் புஜாரா, 37, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்தார்.
மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், கடந்த ஈராண்டுகளாக இந்திய அணியில் இடம்பெற போராடி வந்த நிலையில் ஓய்வை அறிவித்துள்ளார்.
2010ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான புஜாரா, கடைசியாக 2023 உலக டெஸ்ட் வெற்றியாளர் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பின்னர், உள்நாட்டுப் போட்டிகளிலும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார்.
தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்ட அவர், “இந்தியச் சீருடையை அணிந்து, தேசிய கீதத்தைப் பாடி, களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் எனது முழுப் பங்களிப்பை அளிக்க முயற்சி செய்தேன். அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
“ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்று சொல்வதுபோல், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டில் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற தமது தலைமுறையைச் சேர்ந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது புஜாராவும் இந்த முடிவை எடுத்துள்ளார்.
புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட மொத்தம் 7,195 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரது சராசரி ஓட்ட விகிதம் 43.60 ஆகும்.