ஸாகிரேப்: அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் ஏற்று நடத்தும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு குரோவேஷியா தகுதி பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெரோ தீவுகளை 3-1 எனும் கோல் கணக்கில் குரோவேஷியா வீழ்த்தியது.
ஃபெரோ தீவுகள் முதலில் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
இருப்பினும், மனந்தளராது விளையாடிய குரோவேஷியா மூன்று கோல்கள் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.
‘எல்’ பிரிவில் அது 19 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
இரண்டாவது இடத்தில் செக் குடியரசு 13 புள்ளிகளுடன் உள்ளது.
ஓர் ஆட்டமே எஞ்சியிருக்கும் நிலையில், அக்குழுவால் குரோவேஷியாவை முறியடிக்கும் வாய்ப்பு இல்லை.
மற்றோர் ஆட்டத்தில் வடஅயர்லாந்தை 1-0 எனும் கோல் கணக்கில் சிலோவாக்கியா தோற்கடித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது சிலோவாக்கியாவின் வெற்றி கோலை தாமஸ் போப்செக் போட்டார்.
இதன்மூலம் குறைந்தது ‘ஃபிளே ஆஃப்’ சுற்றுக்கு இவ்விரு குழுக்களும் தகுதி பெறும்.
‘ஏ’ பிரிவில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியைப் போலவே சிலோவாக்கியா 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஆனால் ஜெர்மனி கூடுதல் கோல்கள் போட்டுள்ளது.
அடுத்த ஆட்டத்தில் சிலோவாக்கியாவும் ஜெர்மனியும் மோத இருக்கின்றன. இந்த ஆட்டம் ஜெர்மனியில் நடைபெறுகிறது.
அந்த ஆட்டத்தில் ஜெர்மனி சமநிலை கண்டால் போதும், உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு அது தகுதி பெற்றுவிடும்.
லக்சம்பர்க்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசலுக்காக விளையாடும் நிக் வோல்ட்டமாட ஜெர்மனியின் இரண்டு கோல்களையும் போட்டார்.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற நெதர்லாந்தின் கனவு பிரகாசமாக உள்ளது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நெதர்லாந்துக்கும் போலந்துக்கும் இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இருகுழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டன
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற நெதர்லாந்துக்கு மேலும் ஒரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது.
நெதர்லாந்து அதன் அடுத்த ஆட்டத்தில் லித்துவேனியாவைச் சந்திக்கிறது.
இந்த ஆட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 17) நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நடைபெறுகிறது.

